×

உலக மீனவர் தினத்தையொட்டி குமரி கடலோர கிராமங்களில் சிறப்பு திருப்பலி

நாகர்கோவில்: உலக மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடந்தது. உலக மீனவர் தினம் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. மீனவர் தினத்தையொட்டி மீன்பிடிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் படகுகளை சுத்தம் செய்து அதற்கு பூஜை செய்வார்கள். மேலும் கடற்கரை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடக்கும். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மீனவ மக்களுக்காக சிறப்பு திருப்பலிகள் நேற்று காலை நடந்தது.

பின்னர் மீனவர்கள் பயன்படுத்தும் படகுகள், வலைகள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு அர்ச்சிப்பு செய்து பிராத்தனை செய்யப்பட்டது. மணக்குடியில் பங்குதந்தை கிளிட்டஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் மணக்குடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் அர்ச்சிப்பு செய்து பிராத்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மணக்குடி பகுதியில் உள்ள மீனவ மக்கள் கலந்துகொண்டனர். இதுபோல் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் நடந்த பிரார்த்தனையில் மீனவ மக்கள் கலந்துகொண்டனர். நேற்று மீனவர் தினத்தையொட்டி குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் விசைப்படகுகள், படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ மக்கள் மற்றும் மீனவ இயக்கங்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை கடியப்பட்டணம் ஆலயம் அருகே அகில உலக மீனவர் தினத்தை கொண்டாடினர். விழாவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் மக்கள் பிரதிநிதிகள், மீனவ மக்கள் கலந்துகொண்டனர். இதுபோல் சின்னத்துறை புனித யூதா தாதேயூஸ் அரங்கத்தில் நெய்தல் எழுச்சி பேரவை சார்பில் உலக மீனவர் தின விழா மற்றும் நெய்தல் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா ஆகியவை நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Kumari ,occasion ,World Fisher Day , Fisher Day, Kumari, Tiruppally
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...