×

அசுத்தமாகும் அடிப்பாலாறு : கர்நாடக கழிவுகளால் மாசுபடும் காவிரி கரையோர கிராமங்கள்

மேட்டூர்: கர்நாடகாவில் இருந்து மேட்டூர் நீர்வழித்தடத்தில் கழிவுகள் திருப்பி விடப்படுவதால் அடிப்பாலாறு பகுதி அசுத்தமாகி வருகிறது. இதனால் கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் மீனவர்கள், நோய்களின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.  கர்நாடகாவில் பெருக்கெடுக்கும் காவிரி நீரானது, ஒகேனக்கல் வழியாக அடிப்பாலாறு பகுதிக்கு வந்து, மேட்டூர் அணையில் கலக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 101 அடியாக உள்ளது. இதனால் அடிப்பாலாறை சுற்றியுள்ள ஏமனூர், செட்டிப்பட்டி, கோட்டையூர், நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள், முகாமிட்டு மீன்பிடித்து வருகின்றனர்.

இப்படி முகாமிட்டுள்ள மீனவர்களும், கிராம மக்களும் குடிப்பதற்கும், பிற தேவைகளுக்கும் அடிப்பாலாற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக பச்சை நிறத்தில் கழிவுகலந்த நீராக மாறியிருப்பதால் குடிநீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆற்றின் கரையை தாண்டி நடுப்பகுதிக்கு சென்றால், நல்ல நீர் கிடைக்கும் என்று பரிசலில் பயணிக்கின்றனர். ஆனால் நடுப்பகுதியிலும் கழிவுநீரே தென்படுகிறது. அதே நேரத்தில் நல்லநீர் வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் மீனவர்களும், கிராம மக்களும் கழிவு நீரையே வடி கட்டி குடிக்கும் அவலத்திற்கு ஆளாகி உள்ளனர். சொற்ப வருமானத்திற்காக மீன் பிடிக்கச் சென்று, கழிவுநீரை குடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும் பலர், தற்போது நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறியதாவது: கர்நாடகம் நமக்கான காவிரி நீரை தர மறுக்கும் போதெல்லாம் இயற்கைதான் தமிழகத்திற்கு கை கொடுக்கிறது. நமது உரிமையை மறுக்கும் கர்நாடகம், அத்துமீறி கழிவுநீரை மேட்டூர் நீர் வழித்தடங்களில் திருப்பி விடுகிறது. கடந்த 10 வருடங்களாகவே பெங்களூரு நகரில் வெளியேற்றப்படும் கழிவுநீர், அடிப்பாலாறு காவிரி கரையோர பகுதிகளுக்கு வருகிறது. அதிக தொழிற்சாலைகள், நிறைந்த பெங்களூரில் இருந்து அசுத்தமான ரசாயன கழிவுகள் கூட இங்கு வந்து கலக்கிறது. இதன் காரணமாகவே நீர் பச்சை நிறத்திலும்,நீலநிறத்திலும் காட்சியளிக்கிறது. இந்த அவலத்திற்கு தீர்வு காண ேவண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆனால் பொதுப்பணித்துறையோ,அதிகாரிகளோ இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை. போராட்டங்கள் வலுக்கும் நேரத்தில் மட்டும் ஆய்வுக்காக நீரை எடுத்துச் செல்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அடிப்பாலாற்று நீர் 16 கண் மதகு வழியாக செல்கிறது. அங்கும் நீர்,கழிவுகள் கலந்து பச்சை நிறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் கவிபுரம்,சேலம் கேம்ப்,தங்கமாபுரிபட்டணம் உள்ளிட்ட நகரபகுதிகளிலும் பலத்த துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலை நீடித்தால்,எதிர்காலத்தில் பெங்களூர் கழிவுகளால் மேட்டூர் அணையே மாசுபடும் அபத்தமும் நிகழும். எனவே அதை கருத்தில் கொண்டு,தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு நீர்வள ஆர்வலர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Cauvery ,Karnataka , Atippalaru, Cauvery, villages
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு