×

சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் 34 ஆண்டுக்கு பின் முதல் தீர்ப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை மற்றொருவருக்கு ஆயுள் சிறை

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய் காப்பாளர்கள் சுட்டு கொலை செய்தனர். இதனால் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் சுமார் 3000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் தெற்கு டெல்லியில் மகிபால்பூர் பகுதியில் ஹர்தேவ் சிங் மற்றும் அவதார் சிங் என்கிற இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இவர்களது சகோதரர் சந்தோக் சிங் என்பவர் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனது சகோதரர்களை கொலை செய்ததாக நரேஷ் ஷெராவத் மற்றும் யஷ்பால் சிங் ஆகிய இருவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என கடந்த 1994ம் ஆண்டு வழக்கை தள்ளுபடி செய்தது. ஆனால், அதன்பின் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு கையில் எடுத்தது.

டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஜய் பாண்டே வழங்கிய அந்த தீர்ப்பில், நரேஷ் ஷெராவத் மற்றும் யஷ்பால் சிங் இருவரையும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும், இருவருக்கும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறி விசாரணையை அடுத்த நாள் ஒத்தி வைத்தார். அதன்படி, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரில், யஷ்பால் சிங்கிற்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மற்றொரு குற்றவாளியான நரேஷ் ஷெராவத்திற்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சீக்கியர்களுக்கு எதிரான 1984ம் ஆண்டு கலவரத்தில் 34 ஆண்டுகளுக்கு பின் முதல் தண்டனை குற்றவாளிகளுக்கு இந்த வழக்கின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sikhs , judgment, riot case, Sikhs, Death penalty, imprisonment,
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி