×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் ெவள்ளத்தில் மகா ரதம் பவனி: லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் ‘மகாரதம்’ மாட வீதியில் பவனி வந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளான நேற்று ேதர் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று அதிகாலை அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து, மாட வீதயில் அலங்கரித்து நிலை நிறுத்தியிருந்த ஐந்து தேர்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பஞ்ச ரதங்களின் மாட வீதியுலா தொடக்கமாக, சிறப்பு பூஜைகளுடன் விநாயகர் தேர் புறப்பாடு காலை 6.40 மணிக்கு நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பெரிய தேர், சுவாமி தேர் என அழைக்கப்படும் ‘மகாரதம்’ பகல் 2.20 மணிக்கு பவனி தொடங்கியது. அப்போது, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்திப் பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி, மகாரதம் பவனி வந்தது. இரவு 9 மணியளவில் மகாரதம் நிலையை அடைந்தது. தொடர்ந்து, அம்மன் தேர் பவனி புறப்பாடு நடந்தது.  அம்மன் ேதரை வழக்கப்படி பெண்கள் மட்டுமே  வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதியில் பவனி வந்தது. தேரோட்டத்தில், நூற்றுக்கணக்கான தம்பதியர் தங்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்து, கோயில் 3ம் பிரகாரம் மற்றும் மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  அந்த கரும்பை, அண்ணாமலையார் கோயிலில் காணிக்கையாக வழங்கினர்.

பரணி தீப தரிசன டிக்கெட்டுக்கு இன்று ஆன்லைனில் முன்பதிவு
கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, நாளை மறுதினம் (23ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். இதை காண அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்லும் பக்தர்களுக்கு, சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று காலை 11 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகாலை பரணி தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட்களும், மாலையில் நடைபெறும் மகா தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் ஆயிரம் டிக்கெட்களும், ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்கள் பெற விரும்பும் பக்தர்கள். www.arunachaleswarartemple.tnhrce.in  என்ற இணையதளத்தில் இன்று ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvannamalai Karthikai ,devotees ,Deepathirivai Kolakallam ,Maha Rathana Pavani: Millions of Darshan , Thiruvannamalai, Karthikai, devotees,
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்