×

டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு நடவடிக்கை கேரளாவிடம் தமிழகம் ஆலோசனை பெறலாமே?

மதுரை: தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு 40 பேர் பலியானதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேரளாவின் ஆலோசனையை பெறலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொசுக்களால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பாதித்துள்ளனர். பலர் இறந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறும். எனவே, டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க ேபார்க்கால அடிப்படையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘இந்த அறிக்கையில் திருப்தி இல்லை. புள்ளிவிவரங்களுடன் விரிவான பதில்மனு வேண்டும்’ எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

பின்னர் அரசு தரப்பில் மீண்டும் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் டெங்குவால் 3,440 பேர் பாதித்துள்ளனர். இதில், 13 பேர் இறந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு 1,745 பேர் பாதிக்கப்பட்டு, 27 பேர் இறந்துள்ளனர். தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 நாட்களில் உயிரிழப்பு இல்லை,’’ என கூறப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘நேற்று கூட உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது, கேரள அரசு முன்கூட்டியே உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிப்புகளில்  இருந்து மக்களை காப்பாற்றியது. அதேபோல் சிறப்பான நடவடிக்கைகளை ஏன் இங்கு மேற்கொள்ள முடியவில்லை? தேவையான ஆலோசனைகளை கேரளாவிடம் இருந்து பெறலாமே?’’ என்றனர்.
பின்னர், டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள், இவற்றை முன்கூட்டியே தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை சுகாதாரத்துறை செயலர் தரப்பில் தாக்கல் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dengue and swine flu ,preventive action
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...