×

போர்வீரர்களின் உருவம் தாங்கிய சதிக்கல், பன்றி குத்தப்பட்டான் கல் : 15ம் நூற்றாண்டை சேர்ந்தவை

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் அருகே  15ம் நூற்றாண்டைசேர்ந்த போர்வீரர்களின் உருவம் தாங்கிய சதிக்கல், பன்றி குத்தப்பட்டான் கற்களை விவசாயிகள் வழிபட்டு வருவது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார், இலெமூரியா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் நேற்று முன்தினம் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராமத்தின் தென்மேற்கு எல்லையில் ‘கூத்தராயன் வட்டம்’ என்ற இடத்தில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ‘போர்வீரர்களது உருவம் தாங்கிய சதிக்கல்’ மற்றும் ‘காட்டுப்பன்றி குத்தப்பட்டான் கல்’ இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறுகையில், ‘திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் ‘கூத்தராயன் வட்டம்’ என்ற இடத்தில் திறந்த வெளியில் ‘போர்வீரர்களது உருவம் தாங்கிய சதிக்கல்’ காட்டுப்பன்றி குத்தப்பட்டான் கல் கண்டுபிடிக்கப்பட்டது. சதிக்கல்லில், குதிரை மீது ஒரு வீரனும், யானை மீது ஒரு வீரனும் அமர்ந்துள்ளனர். இவர்கள் படை வீரர்களாகவோ அல்லது சிற்றரசர்களாகவோ இருக்கலாம். இருவரது கழுத்திலும் ஆபரணங்களும், காதணியும் அணிந்துள்ளார்கள். யானையும் குதிரையும் விரைந்து பாய்ந்து செல்வது போல வடிக்கப்பட்டுள்ளன.  இவ்விரு வீரர்களும் இப்பகுதியில் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்தவர்களாவர். இவர்களின் மனைவிகளும் கல்லில் இடம் பெற்றுள்ளனர்.  

2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலம் கொண்ட இக்கல்லில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உருவமும் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பன்றிக்குத்தப்பட்டான் கல் என்பது, அக்காலத்தில் விவசாய நிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் விளை பொருட்களைச் சேதப்படுத்திப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். அந்த பன்றிகளை எதிர்த்து மோதி கொன்று ஊரை பாதுகாத்து இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு ‘நடுகல்’ செதுக்கி போற்றும் வழக்கம். அவ்வாறு ஆதியூரில் காணப்படும் இக்கல்லில் 2 வீரர்கள் ஒரு காட்டுப்பன்றியை தங்களது வேல்கம்பால் குத்தி கொன்றவாறு செதுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இருவரும் சகோதரர்களாக இருக்கக்கூடும். காதுகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அணிந்துள்ளனர்.

கரங்களில் மேலிருந்து கீழாக நான்கு இடங்களில் பூண் அணிந்துள்ளனர். இடையில் சிறிய கத்தி வைத்துள்ளனர். இவ்வூரில் வாழும் மக்கள் ‘கூத்தரப்பன்’ என அழைத்து குலதெய்வங்களாக இந்த சிற்பங்களை வணங்கி வருகின்றனர். இம்மக்களில் பலர் ‘கூத்தன்’ என்ற பெயரை கொண்டுள்ளனர். சதிக்கல்லிலும், பன்றிக்குத்தப்பட்டான் கல்லிலும் உள்ள வீரர்கள்  இவர்களது முன்னோர்கள் ஆவர். இங்குள்ள சிற்பங்களின் வடிவத்தை கொண்டு இவை 2ம் கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : warrior , Tiruppattur, conspiracy, soldiers
× RELATED வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.1.40 லட்சத்தில் டெஸ்க், பெஞ்சுகள்