×

வேதாரண்யம் அருகே வண்டல் மீனவ கிராமத்தை வாரி சுருட்டிய கஜா புயல் : டீ குடித்து உயிர் பிழைத்த மக்கள்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வண்டல் மீனவ கிராமத்தை கஜா புயல் வாரி சுருட்டியுள்ளது. அங்குள்ள மக்கள் 4 நாட்களாக வெறும் டீயை குடித்து உயிர் பிழைத்தனர். கஜா புயல் தாக்குதலில் வேதாரண்யம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வேதாரண்யம் அடுத்து தலைஞாயிறு பகுதியில் இருந்து 4 கிமீ தொலைவில் வண்டல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 425 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் மீன் பிடித்தல் ஆகும். இங்கு அரசு ஆரம்ப பள்ளி மற்றும் ஒரு ரேசன் கடை உள்ளது. வண்டல் பகுதியை அடப்பாறு, நெல்லாறு, ராஜன் வாய்க்கால் ஆகிய 3 வாய்க்கால்கள் சூழப்பட்ட பகுதியாக உள்ளது. இதில் வண்டல் மக்களுக்கு போக்குவரத்து வசதிக்காக படகு உள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகில் தலைஞாயிறு வந்து மீண்டும் வண்டலுக்கு செல்ல வேண்டும். மேலும் தலைஞாயிறில் இருந்து வண்டலுக்கு சாலை வசதி உள்ளது. தலைஞாயிறில் இருந்து வண்டல் கிராமத்திற்கான 4 கிமீ பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சேதமானது. அப்போது திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வண்டல் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் சேதமான சாலைகள் தற்போது வரை சீர்செய்யப்படவில்ைல. இந்நிலையில் கஜா புயல் கோரதாண்டவத்தால் மிச்சமிருந்த சாலையும் படுமோசமானது. அந்த கிராமத்திற்கு சென்று பார்த்தபோது கஜா புயலில் கோரத்தாண்டவம் எத்தகைய பயங்கரமானது என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில் புயல் பாதித்த பகுதிகளை 4 நாட்களாகியும் அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர்களோ நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறவில்லை. நிவாரண பொருட்களும் வழங்கப்படவில்லை. சேதமான மின்கம்பங்களை உடனடியாக சரி செய்யவில்லை. அடிப்படை தேவையான குடிநீர், பால் இல்லாததை கண்டித்து 4 நாட்களாக மக்கள் சாலைமறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் புயல் பாதித்த பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்கள்
தயங்குகின்றனர். கடந்த 15ம் தேதி தாக்கிய கஜா புயல் வண்டல் பகுதியும் வாரி சுருட்டியுள்ளது. வண்டலில் போடப்பட்டிருந்து மின்கம்பங்கள் அனைத்தும் சேதமாகி உள்ளது. பொதுமக்கள் வளர்த்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தும் இறந்து கிடப்பதால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இங்குள்ள ஏராளமானோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்து.

குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் சாப்பாடு இல்லாமல் திக்கற்று தவித்து வருகின்றனர். வண்டல் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் ஒரு பைப் துண்டானதால், அந்த பகுதியை மணல் மூட்டை கொண்டு தடுத்து பள்ளம் ஏற்படுத்தி அதன் மூலம் உப்பு தண்ணீர் கலந்து நீரை உபயோகப்படுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் கூறுகையில், வண்டல் பகுதியை அவுரிகாடு பகுதியை இணைக்கும் விதமாக கடந்த திமுக ஆட்சி காலத்தில் திட்டம் போடப்பட்டு கட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது இந்த பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. புயல் தாக்கி 5 நாட்கள் ஆனநிலையிலும் இப்பகுதிக்கு யாரும் வரவில்லை. இங்குள்ள ரேஷன் கடையில் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கொண்டு எப்படி சாப்பிடுவது. இதனால் 4 நாட்களாக பால் இல்லாத டீ மட்டும் போட்டு குடித்து வருகின்றனர்.

ஆடு, மாடுகள் இறந்து 4 நாட்களாகியும் அப்பறப்படுத்தவோ, புதைக்கவோ வழியின்றி அப்படியே கிடப்பதால்  தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்கால அடிப்படையில் இப்பகுதியில் மீட்பு பணிகளை துவங்க வேண்டும். மருத்துவக்குழுவினர் வரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சாலையை சீர் செய்து உயர்த்தி அமைக்க வேண்டும் என்றார்.  நேற்று எல்லோரும் சோர்ந்துவிட்டதால்  ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கஞ்சி காய்ச்சி குடிக்க முடிவு செய்து சமைத்து கொண்டிருந்த போது அருகில் இருந்த மரத்தில் இருந்த பல்லி சமையல் பாத்திரத்தில் விழுந்தது. இதனை உடனடியாக பார்த்து கண்டு பிடித்ததால் பெரும் பாதிப்பில் இருந்து அனைவரும் தப்பினர்.

இதையடுத்து பல்லி விழுந்த சாப்பாட்டை கீழே கொட்டிய பின், மாற்று ஏற்படாக டீ மட்டும் தயாரித்து அருந்தி பசியை அடக்கி கொண்டனர். கஜா புயல் வேதாரண்யத்திற்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலுக்கு முன்னதாக வேதாரண்யம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில் 123 முகாம்களில் 1 லட்சத்திற்கு அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் மின்வசதி மற்றும் டாய்லெட் வசதி இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தண்ணீர் இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என முகாம்களில் தங்கி உள்ளவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gajah Storm ,village ,Vadalevanavu ,Vedaranyam , Vedaranyam, Ghaja storm, people
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...