×

பட்டுக்கோட்டை அருகே தென்னை மரம் விழுந்து பரிதாபம் பூப்பெய்தியதால் தனி குடிசையில் தங்கிய சிறுமி புயலுக்கு பலி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே, பூப்பெய்தியதால் தனி குடிசையில் தங்கிய சிறுமி புயலுக்கு பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. அங்குள்ள ஒரு தென்னந்தோப்பில் கூலி வேலை செய்கின்றனர். அந்த தோப்பிலேயே குடிசையில் வசிக்கின்றனர். இவர்களின் ஒரே மகள் விஜயலட்சுமி என்கிற விஜயா (14). கடந்த 13ம் தேதி பூப்பெய்தினார். இந்து முறைப்படி வீட்டுக்கு எதிரே சில தென்னை ஓலைகளை வைத்து தனி குடிசை கட்டி விஜயாவை தங்க வைத்திருந்தனர். 3 நாட்கள் கழித்து தண்ணீர் ஊற்றி சம்பிரதாயங்கள் நடத்திய பின் வீட்டுக்குள் அழைக்க திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலை வேதாரண்யத்தில் தாக்குதல் நடத்தி பட்டுக்கோட்டை பகுதிக்கு வந்த கஜா புயலின் கோரதாண்டவத்தில் அதிகாலை 3 மணி அளவில் ஒரு தென்னைமரம் அந்த குடிசை மீது விழுந்தது. அது தூங்கி கொண்டிருந்த விஜயாவின் மார்பிலேயே விழுந்து அமுக்கியது.

அப்போது காற்றும், இரைச்சலும் கடுமையாக இருந்ததால் விஜயாவின் அலறல் பெற்றோருக்கு கேட்கவில்லை. சூறாவளி காற்று வீசவே தாய் எழுந்து வந்து பார்த்தபோது, தென்னை மரத்திற்கு அடியில் சிக்கி விஜயா பிணமாகி கிடந்ததை பார்த்து கதறினர். மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டனர். விடிந்ததும் ஊர் மக்கள் உதவியுடன் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்றுமுன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இறுதி சடங்குகள் நடந்தது. ஏற்கனவே இவர்களின் 2வது மகன் வினோத்குமார் (16) கடந்த ஆண்டு பாம்பு கடித்து இறந்தான். தற்போது பூப்பெய்திய ஒரே மகளை இழந்து செல்வராஜின் குடும்பம் தவிக்கிறது. மற்றொரு மகன் மட்டும் உள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pattukkottai , coconut tree, Pattukottai,girl kill, storm
× RELATED பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா