×

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஜெனரேட்டர்களை தேடி அலையும் மக்கள் : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவாரூர் : கஜா புயல் பாதித்த பல பகுதிகளில் இன்னும் மின்தடை நிலவுவதால் குடிநீர், உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்திற்காக பொதுமக்கள் ஜெனரேட்டர்களை தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் 4 நாட்களாகியும் மின்தடை நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை சீராக மேலும் ஒரு வாரம் ஆகலாம் என்பதால், மக்கள் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தும் மாற்றுவழியை தேடியுள்ளனர்.

குறிப்பாக குடிநீர் தேவையை நிறைவேற்ற அரசு தரப்பில் இருந்து கிராம பஞ்சாயத்துகளுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கியுள்ளனர். அதன் மூலம் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒரு மணி நேரம் அளவிற்கு குடிநீர் வழங்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது போதுமான அளவிற்கு இல்லை என கூறப்படுகிறது. மேலும் பெரிய ஜெனரேட்டர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்ளே உள்ள கிராமங்களுக்கு ஜெனரேட்டர்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த கிராமங்களில் சிறிய அளவிலான 1000 kv ஜெனரேட்டர்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 1000 kv ஜெனரேட்டர்களுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. மேலும் 1000 kv ஜெனரேட்டர்களின் விலை ரூ.18,000 உள்ள நிலையில் பொதுமக்கள் சொந்தமாகவே வாங்கவும் தயாராக உள்ளனர். இதையடுத்து கோவையில் இருந்து அதிகளவிலான ஜெனரேட்டர்களை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், குடிநீருக்காக ஜெனரேட்டர் வாடைக்கு எடுத்த ரசீதை கொடுத்தால் அரசு பணம் வழங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் பேரிடர் மேலாண்மையின் கீழ் உள்ள ஜெனரேட்டர்களை வரவழைத்து அனைத்து ஊராட்சிகளுக்கும் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : generators ,areas ,storm , Gaja Storm, Generators, TN Government
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்