×

கஜா புயலால் நிறுத்தப்பட்டிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மீண்டும் படகுகள் சவாரி துவங்கியது

சிதம்பரம்: கஜா புயல் எதிரொலியாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது படகு சவாரி துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம் சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களிலும், தமிழகத்தில் பிச்சாவரம் மற்றும் முத்துபேட்டையில் மட்டுமே அரிய வகை சதுப்பு நிலக்காடுகள் உள்ளது. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுரபுன்னை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுன்னை செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவையாகும்.

கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படம்  பிச்சாவரம் பகுதியில் படமாக்கப் பட்டதால் இப்பகுதி பிரபலமாகியது. இதனால் இங்குள்ள தீவுக்கு எம்ஜிஆர் திட்டு என பெயர் வந்தது. பின்னர் பிச்சாவரம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அங்கு அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. தற்போது வனத்துறை சார்பிலும் படகுகள் இயக்கப்படுகின்றன. சுரபுன்னை காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் சென்று ரசித்து வருகின்றனர். தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு கார் மற்றும் வேன்களில் வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சிதம்பரத்தில் இருந்து அருகாமையில் இருப்பதால் பிச்சாவரத்துக்கு வந்து படகு சவாரி சென்று வருகின்றனர். கஜா புயல் எதிரொலியாக கடந்த 14ம்தேதி முதல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பிச்சாவரம் சுற்றுலா மையம் வெறிச்சோடியது. கஜா பாதிப்பு இல்லாததால் நேற்று முன் தினம் முதல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போக்குவரத்து தொடங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிச்சாவரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், பறவைகளையும் வெகுவாக பார்த்து ரசித்தனர்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tourist center ,Pichavaram ,storm , Gajah Storm, Pichavaram, Boats
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...