×

கஜா புயலால் மடத்துக்குளம் அருகே சாய்ந்த கரும்பு பயிர்

உடுமலை: கஜா புயலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தில் விவசாயமே பிரதான தொழில்.  அமராவதி பாசனத்தில்  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்காக கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. வறட்சி காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக கரும்பு சாகுபடி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணை நிரம்பி அமராவதி பாசன பகுதிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்படி, மடத்துக்குளம் சுற்று பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கஜா புயலின் தாக்கத்தால் சாமராயப்பட்டி, கண்ணடிப்புத்தூர், நிலம்பூர், பெருமாள்புதூர் மற்றும் குமரலிங்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் கரும்பு பயிர்கள் கடந்த 16ம் தேதி அடியோடு சாய்ந்தது.

இரண்டாண்டுகளுக்கு பின் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கடந்த மே மாதம் கரும்பு நடவு செய்யப்பட்டது. நிலை பயிராகவுள்ள கரும்பு நன்கு விளைந்தால் ஏக்கருக்கு, 40 முதல் 50 டன் வரை விளைச்சல் கிடைக்கும். ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. புயலின் பாதிப்பால் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேளாண்துறை சார்பில் பதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sugarcane crop ,storm ,Madathukulam ,Gaja , Gajah Storm, Madathukulam, Sugarcane
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...