லீச், மொயீன் சுழலில் மூழ்கியது இலங்கை: தொடரை வென்றது இங்கிலாந்து

கண்டி: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், 57 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 285 ரன், இலங்கை 336 ரன் குவித்தன. இதையடுத்து, 46 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 346 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ரூட் 124, பர்ன்ஸ் 59, போக்ஸ் 65* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 301 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 4ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன் எடுத்திருந்தது. கருணரத்னே 57, மேத்யூஸ் 88, ரோஷன் சில்வா 37 ரன் எடுத்தனர். டிக்வெல்லா (27 ரன்), தனஞ்ஜெயா இருவரும் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். வெற்றிக்கு இன்னும் 75 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஜாக் லீச் - மொயீன் அலி சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

டிக்வெல்லா 35 ரன் எடுத்து மொயீன் சுழலில் ஸ்டோக்ஸ் வசம் பிடிபட்டார். கேப்டன் சுரங்கா லக்மல் டக் அவுட்டாகி வெளியேற, புஷ்பகுமாரா 1 ரன் எடுத்து லீச் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். இலங்கை அணி 74 ஓவரில் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக் லீச் 28 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். மொயீன் அலி 4 விக்கெட் (19-2-83-5), அடில் ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 57 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது இன்னிங்சில் சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்புவில் 23ம் தேதி தொடங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: