×

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இலவச அமரர் ஊர்திகளின் எண்ணிக்கை குறைப்பு: உடல்களை எடுத்து செல்ல முடியாமல் உறவினர்கள் தவிப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் சடலங்களை அனுப்ப காலதாமதம் ஏற்படுகிறது. சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக 10 அமரர் ஊர்திகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில், அமரர் ஊர்திகளின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது. இலவச அமரர் ஊர்தி சேவையை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ரெட்கிராஸ் மேற்கொண்டு வருகிறது. ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துமவனையில், தினசரி 25 பேர் இறந்து அவர்களின் உடல்கள் பிணவறையில் வைக்கப்படுகிறது. அதேபோல், குறைந்தபட்சமாக விபத்துகளில் சிக்கி இறக்கும் 10 பேரின் உடல்கள் தினமும் ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன், அதிகாரிகள் சிலர் தனியார் அமரர் ஊர்திகளுடன் உரிமையாளர்களை தொடர்பில் வைத்துக்கொண்டு, வெளியூர்களுக்கு உடல்களை எடுத்துச் செல்லும் பணி வழங்கியதன் மூலம் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து இறந்தவரின் குடும்ப உறுப்பினரிடம் அரசின் இலவச அமரர் ஊர்தி சேவையை பயன்படுத்த வலியுறுத்துமாறு, சுகாதாரத்துறை தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், எந்தவிதமான முன்னறிப்பும் இன்றி, இலவச அமரர் ஊர்தி வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பிரேத பரிசோதனை முடிந்ததும், உடலை தருமாறு கேட்டுக்கின்றனர். சொந்த வாகனத்திலோ, தனியார் அமரர் ஊர்திகளிலோ உடலை எடுத்துச் செல்ல வேண்டுமானால், அப்போது பணியில் உள்ள நிலைய மருத்துவ அலுவலருக்கு (ஆர்எம்ஓ) கடிதம் எழுதி சொந்த விருப்பத்தின் பேரில்தான், எடுத்து செல்வதாக அவரை சந்தித்து ஒப்புதல் பெற வேண்டும். ஏற்கனவே சுகதாரத்துறைத் தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பணியில் இருக்கும் ஆர்எம்ஓ கூடுமான வரை அரசு சேவையை பயன்படுத்துங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார். இதனால் பிரேத பரிசோதனை முடிந்தும் பல மணி நேரம், உடலை பெறுவதற்காக குடும்ப உறுப்பினர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த மாத தொடக்கம் முதல் அரசுப் பொது மருத்துவமனையில் இப்பிரச்னை தினசரி நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டபோது, ‘‘ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விபத்தில் சிக்கி இறந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இலவச அமரர் ஊர்திகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் விரைவில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajiv Gandhi State General Hospital ,Relatives , Rajiv Gandhi Government General Hospital,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...