×

சூளைமேடு, பனையூர், பிராட்வேயில் துணிகரம் 102 சவரன், ரூ.1.50 லட்சம் கொள்ளை

சென்னை: சூளைமேடு, பனையூர், பிராட்வே ஆகிய பகுதிகளில்  வீடுகளுக்குள் புகுந்து 102 சவரன், ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் மாலா (48). இவர் நேற்று முன்தினம் மதியம் வெளியே சென்றார். இவரை தொடர்ந்து அவரது மகனும் வெளியே சென்றார். அப்போது வீட்டின் கதவை பூட்டாமல் சாத்திவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், மாலா வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறை முழுவதும் துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பீரோவை பார்த்தார். அதில் வைத்திருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 35 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டின் கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் கைவரிசை காட்டினார்களா, உறவினர்கள் யாரேனும் கைவரிசை காட்டினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* பனையூர், அக்கரை சி-கிளப் அவென்யூ, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜன் (55). தனியார் கம்பெனி மேலாளர். இவரது மனைவி சித்ரா (50). நேற்று முன்தினம் இரவு ராஜன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றார்.
நள்ளிரவு வீடு திரும்பியபோது, பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 25 சவரன் நகைகள், ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.
* பிராட்வே மண்ணடி முத்துமாரி செட்டி தெருவை சேர்ந்தவர் சபீர் (52). கடந்த 15ம் தேதி சபீர் தனது குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 சவரன் நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது.
* ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன் (எ) தோப்பி (28) மற்றும் கருணாகரன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
* நன்மங்கலம் ஏரியில் மிதிந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று முன்தினம் மாலை கன்டெய்னர் லாரி சென்னை துறைமுகத்துக்கு செல்ல நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிய அதேப் பகுதியை சேர்ந்த ரவி (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அஜய் (21). பிரபல ரவுடி. கத்திமுனையில் சாலையில் செல்வோரை மிரட்டிக்கொண்டு இருந்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியில் வந்த அஜய் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (40) என்பவரிடம் செல்போனை பறித்து சென்ற கொடுங்கையூரை சேர்ந்த சத்யராஜ் (19), சாம் (20), அருண்குமார் (19) ஆகிய மூன்று பேரை மாதவரம் பால்பண்ணை போலீசார் கைது செய்தனர்.
* குரோம்பேட்டை - தாம்பரம் இடையே சானடோரியம் ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற செந்தில் (30) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
* போரூர் அருகே நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் மகன் கண்முன்னே சென்னை, விருகம்பாக்கம், காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வி (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
* மாடம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல், கல்லூரியில் ஆந்திராவை சேர்ந்த நவீன் (190 என்ற மாணவனை ராகிங் செய்து, பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய, சக மாணவர்களான சேலையூரை சேர்ந்த, பிரசாந்த்,(21), அமர்நாத் ரெட்டி (21), அரிக்குமார் (21), வெங்கடேஷ் (21) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
* பிராட்வே பகுதியை சேர்ந்த சையது அலி (22) என்பவரிடம் 4 சவரன் நகையை பைக் ஆசாமிகள் பறித்து கொண்டு தப்பினர்.
* ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், நியூ காலனி, என்.ஜி.ஒ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில், தனியார் காஸ் ஏஜென்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், சமையல் காஸ் காலி சிலிண்டர்களை வாங்கிக் கொண்டு, நீண்ட நாட்களாக புதிய காஸ் சிலிண்டர்களை வழங்காமல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த வெங்கடேசன் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் செல்போன் திருட்டு வழக்குகளில் தொடர்புடை 267 செல்போன்களை கைபற்றிய திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வநாகரத்தினம் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

40 செல்போன், 6 பைக் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வளசரவாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த 2 பேரை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு மற்றும் வீடுகளின் முன்பு நிறுத்தியிருக்கும் பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது.


இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 16 வயதுக்கு உட்பட்ட மேலும் 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த விலையுயர்ந்த 40 செல்போன்கள் மற்றும் 6 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Choolaimedu ,sovereigns ,Broadway ,robbery , Choolaimedu, Panayur, Broadway, robbery
× RELATED அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்...