×

புயல் பாதித்த பகுதிகளில் பதற்றம் நீடிப்பு அமைச்சர்களின் வாகனங்கள் முற்றுகை

* உணவு, குடிநீர் கிடைக்காததால் மக்கள் ஆவேசம்
* முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் திடீர் ரத்து

நாகை: கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் சரிவர எடுக்கப்படவில்லை. உணவு, குடிநீர் கிடைக்கவில்லை; பட்டினியில் திண்டாடுகிறோம் என்று  மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். பதற்றமான சூழலில் அங்கு சென்ற அமைச்சர்களின் வாகனங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அமைச்சருடன் வந்த அதிமுகவினரின் கார்கள் நொறுக்கப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.   கஜா புயலால் நாகை மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில்  10 ஆயிரம் மின் கம்பங்களும் 200 மின்மாற்றிகளும் விழுந்து நொறுங்கியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாவட்டத்தில் சில கிராமங்களில் எந்தவித நிவாரண பணிகளும் நடக்கவில்லை. அதிகாரிகளில் பலரும் சென்று பார்க்கவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று, வேதாரண்யம் பகுதியில் சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  நாகை-வேதாரண்யம் சாலை, விழுந்தமாவடி கன்னித்தோப்பு பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தொண்டர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மீனவ மக்கள், மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் அமைச்சரை பார்த்தவுடன் ஆவேசமாக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் காரின் முன்புறம் சென்றவர்கள் ஆத்திரமடைந்து கார்களை பொதுமக்கள் மீது மோதுவதுபோல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதில் கோபமடைந்த பொதுமக்கள் ஒரு கார் மீது கல்வீசி தாக்கினர். காரில் இருந்த அதிமுகவினர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

  இதை பார்த்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் டிரைவர், காரை ரிவர்சிலேயே  அரை கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓட்டியபடி, வேதாரண்யம் சென்றார். அப்போது அந்த பகுதியில் நாகை எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் ரோந்து வந்தனர். அவர்களை பார்த்தவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய அதிமுகவினர் 2 பேர், போலீஸ் வேனில் ஏறிக்கொண்டனர். அவர்கள் தங்களை தலைஞாயிறில் இறக்கிவிடும்படி கூறினர். இதை பார்த்த பொதுமக்கள், போலீஸ் வேனை மறித்து, கட்சிக்காரர்கள் 2 பேரையும் கீழே இறக்கி விடவேண்டும் என்றுகூறி அந்த வாகனத்தையும் தாக்க தொடங்கினர். சந்து சந்தாக ஓட்டம்: உடனே வேனில் இருந்த ஆயுதப்படை போலீசார் 12 பேர் மற்றும் கட்சியினர் 2 பேரும் கீழே இறங்கி ஓட ஆரம்பித்தனர். அவர்களை பொதுமக்கள் விரட்டினர். பயந்துபோன அதிமுகவினர் 2 பேரும் சந்து சந்தாக ஓடி தலைமறைவாகிவிட்டனர். ஆயுதப்படை போலீசார் 12 பேர் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மறைந்து இருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்குசென்று 12 பேரையும் தாக்கினர். போலீசார் 12 பேரும் தங்களை விட்டு விடும்படி கெஞ்சினர். அதன்பின்னர், அவர்களை பொதுமக்கள் விடுவித்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 11 பேர் காயமடைந்தனர்.   இதேபோல், காமேஸ்வரபுரத்தில் நிவாரண பணிகள் நடக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில்  ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்ட கமாண்டர் எஸ்.பி. மனோகர், 50 போலீசாருடன் அங்கு வந்தார். போராட்டத்தை கைவிடுமாறு  பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், எஸ்.பி. மனோகர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசினர். உடனே, போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர்.

அமைச்சரை மக்கள் முற்றுகை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் உள்ளது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள இங்கு  புயலின் பாதிப்பை பார்வையிட கிராம கைத்தறி தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் நேற்று சென்றனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு நிவாரண உதவி வழங்கினர். இதன்பின், வலசைப்பட்டி காலனிக்கு காரில் சென்றபோது குடிநீர் கேட்டு அமைச்சர் பாஸ்கரனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, `ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 3 நாட்களாக மின்சாரமின்றி கடும் அவதிப்படுகிறோம்’ என்று அமைச்சரிடம் அவர்கள் முறையிட்டனர். மக்கள் முற்றுகையால் அமைச்சர் காரைவிட்டு கீழே இறங்க முடியாமல் பரிதவித்தார். உடனே,  எம்.பி. செந்தில்நாதன் காரை விட்டு இறங்கி, `குடிநீர் பிரச்னை உடனடியாக தீர்க்கப்படும்’ எனக்கூறி சமாளித்தார். இதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

வீட்டுக்குள் முடங்கிய எம்.எல்.ஏ: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகே 500க்கும் அதிகமான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தராஜின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, `பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்’ என கோஷமிட்டனர். ஆனால், பயந்து வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே கோவிந்தராஜ் எம்எல்ஏ இருந்துகொண்டார்.  இதனால் ஆத்திரமடைந்த சிலர், எம்.எல்.ஏ.  வீடு மீது சரமாரியாக கற்களை வீசி எறிந்தனர். இதன்பின், மீண்டும் அண்ணா சிலை அருகே சென்று சாலை மறியலில் ஈடுபட்டுவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களின் கிராம பகுதிகளில் மக்கள் நிவாரணம் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் பயணம் ரத்து: நாகை மாவட்டம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு நிவாரணம் கிடைக்காததால் கொதித்துப்போய் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அங்கு சென்று பார்வையிட இருந்ததை திடீரென ரத்து செய்தார். இதுகுறித்து சேலத்தில் நேற்று பேட்டியளித்த அவர், முன்கூட்டியே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கு செல்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் செவ்வாய்க்கிழமை (நாளை) நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட செல்கிறேன் என தெரிவித்தார்.பாதியில் திரும்பிய துணை முதல்வர்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே குருசடி மேல்பகுதியில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை மட்டும் நேற்று முன்தினம் பார்த்து விட்டு, ஊருக்குள் சென்று சேத பகுதிகளையும் மக்களையும் சந்திக்காமல் திரும்பி சென்று விட்டனர்.

அதிகாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் 50 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் வேளாண் துறை அதிகாரிகள் சிலர் சேதமடைந்த விபரத்தை சேகரிக்க நேற்று முன்தினம் சென்றனர். அப்போது  வடகாடு பகுதி பொதுமக்கள், அதிகாரிகளை சிறைபிடித்து, `தங்களது வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனையும் கணக்கு எடுக்கவேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். மேலும், அதிகாரிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்த புதுக்கோட்டை டி.ஆர்.ஓ. ராமசாமி, ஆர்.டி.ஓ. டெய்சிகுமார் மற்றும் ஆலங்குடி டி.எஸ்.பி. அய்யனார் ஆகியோர் கீரமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால், கொத்தமங்கலம் பகுதியில் அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பொதுமக்களில் சிலர், டிஎஸ்பி அய்யனார் மீது கற்களை வீசினர். இதில் தலையில் படுகாயமடைந்த அய்யனாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில், 50 பேரை நேற்று கைது செய்தனர்.

சாலையில் மரங்கள் எரிப்பு
ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட மறமடக்கியில் சேதம் குறைவாக அதிகாரிகள் காட்டி உள்ளனர் என்று விவசாயிகளுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், மறமடக்கி கடைவீதியில் கூடினர். அப்போது, போலீஸ் ஜீப் மற்றும் வேனில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் 20 போலீசார் வந்தனர். உடனே விவசாயிகள் அவர்களை சிறைபிடித்தனர். மற மடக்கியில் இருந்து செல்லும் 4 சாலைகளிலும் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். சாலையில் மரங்களை போட்டு எரித்தனர். மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருவ பொம்மை செய்து, செருப்பு மாலை அணிவித்தனர். இதனிடையே, காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை போலீசார் சிறை வைக்கப்பட்டிருந்த தகவல் அறிந்து அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா வந்து பேசினார். அப்போது, `மற மடக்கியில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்’ என உறுதியளித்தார். இதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றதுடன் போலீசாரை விடுவித்தனர்.

* அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் சூழ்ந்து ெகாண்டதால் அவர் பதற்றம் அடைந்தார்.
* கார் டிரைவர், காரை ரிவர்சிலேயே  அரை கிலோ மீட்டர் தூரம்  ஓட்டியபடி, வேதாரண்யம் சென்றார்.
* குடிநீர் கேட்டு அமைச்சர் பாஸ்கரனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
* பொதுமக்களுக்கு பயந்து வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே கோவிந்தராஜ் எம்எல்ஏ இருந்துகொண்டார்.
* துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கொடைக்கானல் சேத பகுதிகளையும் மக்களையும் பார்க்காமல்  திரும்பி சென்று விட்டனர்.

அமைச்சர்கள் தாமதத்தால் நாள் முழுக்க நிவாரண பணி பாதிப்பு
நாகை மாவட்டத்திற்கு நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி, தங்கமணி,  ஓ.எஸ்.மணியன் ஆகிய 5 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைச்சர்கள்  நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாகவும், நிவாரண பணிகளுக்கு செல்வதாகவும்  நிருபர்களுக்கு  வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 3.25 மணி என்று  தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாலை 6 மணி வரை எந்த அமைச்சரும் வராததால் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கைவிடப்பட்டது. அதிகாரிகள் காலை முதல் மாலை வரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்ததால், நிவாரண  பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் அதிகாரிகள்  சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siege ,ministers ,tension ministries ,areas , Tension, affected , storm Siege , Ministers ,vehicles
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...