×

ஜோத்பூரில் இருந்து எழும்பூருக்கு வந்த ரயிலில் சென்னை ஸ்டார் ஓட்டல்களுக்கு கொண்டு வந்த 1000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

சென்னை: ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்த ரயிலில் 1000 கிலோ அழுகிய நாய் இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னை ஓட்டல்களுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்ட ‘பகீர்’ தகவல் தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பின்னர் அந்த ரயில் காலை 10.40 மணிக்கு மன்னார்குடி நோக்கி புறப்பட தயாரானது. அப்போது அந்த ரயிலில் வந்த பார்சல்களை ஊழியர்கள் இறக்கி முகவரியை சரிபார்த்து கொண்டிருந்தனர். ரயில் பார்சல் பெட்டியில் இருந்து இறக்கப்பட்ட 20 பெட்டிகளின் மேல் முகவரி எதுவும் தெளிவாக இல்லை. மேலும் அந்த பார்சல்களில் இருந்து துர்நாற்றம் மற்றும் ஈக்கள் மொய்த்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பார்சல் ஊழியர்கள் யாரையாவது ெகாலை செய்துவிட்டு பார்சலில் அனுப்பி இருப்பார்களோ என்ற சந்தேகம் அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் நாய்கள் கொல்லப்பட்டு, தோல் உரிக்கப்பட்டு துர்நாற்றம் வராமல் இருக்க ஐஸ்போட்டு சென்னைக்கு அனுப்பி இருந்தது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அலுவலர்கள்,  ரயில்நிலைய பிளாட்பாரத்தில் இருந்த அனைத்து பார்சல்களையும் பிரிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.  அதில் ஒரு பெட்டியில் மட்டும் அழுகிய மாட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது. எனினும் துர்நாற்றம் வீசிய  மற்ற பெட்டிகளையும் பிரிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த பார்சல்களை பிரித்து பார்த்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அந்த பெட்டிகளில் நாய்கள் கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டு அதை கன்று குட்டியின் இறைச்சி என்று காட்டும் வகையிலும் ஆடு குட்டிகளின் இறைச்சி என்று பார்க்கும் வகையிலும் தோல்கள் உரிக்கப்பட்டு வெளிறிய நிறத்தில் காணப்பட்டது.

அந்த இறைச்சியை எடுத்து சோதனை செய்ததில் மாட்டு இறைச்சி உடன் நாய் இறைச்சியை கலந்து பார்சலில் அனுப்பி உள்ளது தெரியவந்தது.  பிறகு ரயில் நிலையத்தில் இருந்த 20 இறைச்சி பார்சல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதை உறுதிப்படுத்த ஒவ்வொரு பார்சல்களில் இருந்தும் சில இறைச்சி துண்டுகளை எடுத்து சோதனைக்காக வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி, முறைப்படி சான்றிதழ் வாங்கும் நடவடிக்கையில் இறங்கினர். ரயிலில் வந்த இறைச்சி அனைத்தும் அழுகி துர்நாற்றம் அடித்ததால் அதை பறிமுதல் செய்து மண்ணில் புதைத்து அழிப்பதற்கு கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடக்கிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது, ‘‘சென்னையில் சில ஓட்டல்களில், பிரியாணியில் ஆட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி, பூனை இறைச்சியை ஆட்டுக்கறியுடன் கலந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

எனினும் அது எந்த வகையில் தமிழகத்திற்குள் வருகிறது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் எங்கள் துறையினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது ரயில்கள் மூலம் பெருமளவு கொல்லப்பட்ட நாய்களின் இறைச்சி கொண்டுவருவது தெரியவந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர,தெருவோர கடைகளில் இப்படி மிக்ஸ் செய்து விற்கலாம். மேலும் சில ஸ்டார் ஓட்டல்களில் வடஇந்தியர்களுக்காக நாய் கறிகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எந்த ஸ்டார் ஓட்டலில் நாய் கறிகள் ரகசியமாக நன்கு தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை விசாரித்து வருகிறோம். சென்னையில் ஆயிரம் கிலோ அளவுக்கு நாய் இறைச்சி கடத்தி வந்ததும் அது சிக்கியதும் இதுவே முதல்முறையாகும். இதனால் மேலும் பல ரயில்களில் இதுபோல தினமும் கடத்தி வந்திருக்கலாம். இது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Jodhpur ,Egmore ,Chennai Star Hotels , Jodhpur, Rail, Chennai, Star Hotel, Food Security Department
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...