×

கொடைக்கானலில் பொதுமக்கள் அதிருப்தி புயல் பாதிப்புகளை பார்க்காமல் பாதியிலேயே திரும்பிய ஓபிஎஸ்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கஜா புயல் தாக்கியதில் சுமார் 1,000 மரங்கள் முறிந்து விழுந்தன. 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து, மின்இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டன. நேற்று மதியம் கார், பைக் போன்ற வாகனங்களின் போக்குவரத்து சீரானதும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவிருப்பதாக தகவல் வந்தது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே குருசடி மேல்பகுதியில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை மட்டும் பார்த்து விட்டு திரும்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு ஓபிஎஸ், ‘‘நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் திரும்பி செல்கிறேன். மண் சரிவில் இறந்த 4 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு 2 நாட்களில் தலா 10 லட்சம் வழங்கப்படும்’’ என்றார். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த துணை முதல்வர், அமைச்சர் பாதியிலேயே திரும்பி சென்றது கொடைக்கானல் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

‘திண்டுக்கல்லுக்கு நிறைய புயல் வரட்டும்’
திண்டுக்கல் குமரன் பூங்காவில் புயல் சேதங்களை அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன், நேற்று காலை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘புயலால் அதிகளவு பாதித்த கொடைக்கானல் செல்லும் மலைச்சாலைகளில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. புயல் நிறைய வரட்டும். அப்போதுதான் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் பிரச்னை தீரும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : OBS ,Kodaikanal , Kodaikanal, Public, Storm Damage, OPS
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...