×

புயல் தாக்கிய மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரிய முன்னேற்பாடுகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ‘கஜா’ புயலை ஒட்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் மேற்கொண்ட முன்னேற்பாடுகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கஜா புயலினால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புயலின் பின் விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்த செய்திகள் அதிர்ச்சி தருகின்றன.

இந்த நிலையினைச் சீர் செய்து சகஜநிலை திரும்பி மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடந்திட, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன். புயல் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வெளியிடப்பட்டவுடன், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது. அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும்.முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு, உடை, படுக்கை வசதி, மருத்துவ வசதி போன்றவை போதுமான அளவுக்கு குறையேதுமின்றிச் செய்து தரப்பட வேண்டும்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியமாகும். தாமதமும் அலட்சியமும் காட்டினால், 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட செயற்கை வெள்ள பாதிப்புகளைப் போல ஏராளமான இழப்புகள் ஏற்படும் என்பதையும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளை மேற்கொள்ள திமுகவினருக்கு அறிவுரை
நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தி.மு.க.வினரின் கடமை. புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள தி.மு.கழக நிர்வாகிகளும் கழகத்தின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களும் கழகத் தொண்டர்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, நிலைமையைக் கண்டறிந்து மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உடுப்பணியாத ராணுவம் போல களமிறங்கி, அரசுத் தரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றுவீர். எல்லா நிலையிலும் தமிழ்நாட்டு மக்களுக்குத் துணை நிற்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமையாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Districts ,MK Stalin ,Disaster Management Board ,Tamil Nadu , Wasteland Recovery , MK Stalin,r Tamil Nadu Disaster Management Board
× RELATED சென்னையில் இருந்து வேறு...