×

பரிந்துரை செய்ய தீர்ப்பாயம் திரிபுராவில் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை?

புதுடெல்லி: திரிபுராவை சேர்ந்த 2 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பது பற்றி முடிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிந்து ஆயுத போராட்டம் மூலம் சுதந்திர அரசு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரிபுராவில் தேசிய திரிபுரா விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை என்ற 2 தீவிரவாத அமைப்புகள் கடந்த 1990ல் உருவாகின. திரிபுராவை மையமாக கொண்டு இயங்கும் இந்த 2 தீவிரவாத அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த 2 அமைப்புகளும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை மக்களிடம் பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. எனவே, அந்த 2 அமைப்புகளையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கலாமா என மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து முடிவு செய்வதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் தலைமையில் தீர்ப்பாயம் அமைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பாயம், திரிபுராவில் இயங்கும் தேசிய திரிபுரா விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தும். அவற்றை சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க போதுமான காரணங்கள் இருந்தால் இரு அமைப்புகளையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tribunal ,terrorist organizations ,Tripura , Tribunal , prohibit terrorist, organizations ,Tripura
× RELATED பாஜகவில் மீண்டும் சீட் தராததால்...