×

2வது டெஸ்டில் 218 ரன்னில் வெற்றி ஜிம்பாப்வே தொடரை டிரா செய்தது வங்கதேசம்

தாக்கா: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்டில் 218 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி, தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. வங்கதேசம் வந்த ஜிம்பாப்வே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே 151 ரன் வித்தியாசத்தில் வென்று, 17 ஆண்டுக்குப் பிறகு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து, 2வது டெஸ்ட் தாக்காவில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 443 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னுடன் இருந்தது. டெய்லர் 4, வில்லியம்ஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வில்லியம்ஸ் (13) முஷ்டாபிசுர் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்களும் விரைவிலேயே நடையை கட்டினர்.

மூர் (13), டிரிபானோ (0), மவுதா (0), ஜார்விஸ் (1) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்திய மெஹ்தி ஷசன் மிராஸ் ஜிம்பாப்வேயின் ஆட்டத்தை முடித்து வைத்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நம்பிக்கையுடன் நங்கூரமிட்ட பிரண்டன் டெய்லர் சதம் அடித்தார். அவர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க, ஜிம்பாப்வே அணி 83.1 ஓவரில் 224 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். இவர் முதல் இன்னிங்சில் 110 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்நிய மண்ணில் ஒரே டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனாலும் அவரது சிறப்பான ஆட்டம் வீணானது. வங்கதேச தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மெஹ்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 218 ரன் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருதும், தைஜூல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,Zimbabwe ,win ,Bangladesh , 2nd Test, the 218-run ,win over Zimbabwe was Bangladesh
× RELATED தேர்தல் பறக்கும்படை சோதனை; ராஜபாளையத்தில் ₹3.33 லட்சம் பறிமுதல்