×

ராஜபக்சே பேச்சை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி.க்கள் அமளி, கைகலப்பு: சபாநாயகரும் தாக்கப்பட்டார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று ராஜபக்சே தனது பேச்சை முடித்தவுடன், அவரது ஆதரவு எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, சபாநாயகரை முற்றுகையிட்டனர். இதை எதிர்த்து ரணில் ஆதரவு எம்.பி.க்கள் களம் இறங்கினர். இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26ம் தேதி அதிபர் சிறிசேனா திரும்ப பெற்றார். மேலும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி உத்தரவிட்ட அவர், நாடாளுமன்றத்தையும் முடக்கினார். புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனால் நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனா ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இதில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜபக்சே அரசு தோல்வியடைந்தது. ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்  வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து அதிபர் சிறிசேனாவிற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடிதம் எழுதினார்.

மிகுந்த பரபரப்புக்கு இடையே இரண்டாவது நாளாக இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அவையில் பேசிய ராஜபக்சே, “நான் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ளேன். எனவே இந்த பிரதமர் பதவி எனக்கு முக்கியமானது அல்ல. 225 உறுப்பினர்களும் என்னோடு இணைந்து புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுங்கள். நாங்கள் பொதுத்தேர்தலை விரும்புகிறோம். தேர்தல் மூலம் தான் அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். என்னை நீக்க சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றார். இதனையடுத்து ராஜபக்சே கோரிக்கை ெதாடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அக்கட்சி உறுப்பினர் லஷ்மண் கைரேலா, பெயர் மூலமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார். இதனை ஏற்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா உறுப்பினர்கள் சத்தமாக ஆம் என்று கூறுமாறு தெரிவித்தார். இதனையடுத்து சிறிசேனா மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் கூச்சலிட்டனர். சபாநாயகர் ஜெயசூர்யாவை அவர்கள் சூழ்ந்து கொண்டனர். வாக்கெடுப்பு நடத்த சம்மதித்தத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது கரு ஜெயசூர்யா, ‘‘இங்கு நான் தான் சபாநாயகர், நான் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என கோபமாக கூறினார். அவரை ரணில் ஆதரவு எம்பிக்கள் பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த சிறிசேனா, ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் காகிதத்தை கிழித்தெறிந்ததோடு, ரணில் ஆதரவு எம்பிக்களுடன் கைலப்பில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் எம்பி ஒருவர் காயமடைந்தார். ரத்தம் வெளியேறிய நிலையில் அவையில் இருந்து அவர் வெளியே  சென்றார். ஒரு கட்டத்தில் சபாநாயகரும் தாக்கப்பட்டார். இதைத்ெதாடர்ந்து, அவையில் ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என்று கூறிய சபாநாயகர் கரு ஜெயசூர்யா அவையை 23ம் தேதி வரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : speech ,Rajapakse ,MPs ,speaker ,Sri Lankan ,Parliament , Rajapaksa, parliament, Sri Lanka, speaker attacked
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...