×

மானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்

மானாமதுரை: மானாமதுரையில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருநாய்களால் வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாக கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் உலா வருகின்றன. இவற்றில் கறிக்கோழி கடைகளில் கொட்டப்படும் கோழி கழிவுகளை உண்டு பெருகி வரும் நாய்களுக்கு தோல் நோய்கள் ஏற்பட்டு, வெறிபிடித்து சுற்றி திரிகின்றன.ஒருசில நேரங்களில் போதுமான உணவு கிடைக்காத நிலையில் அன்புநகர், அண்ணாமலை நகர், சாஸ்தா நகர் உள்ளிட்ட பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை வேட்டையாடி வருகின்றன.

அண்ணாமலை நகரில் பெரும்பாலான பெண்கள் கோழிகளை வளர்த்து மாத வருமானம் ஈட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் இருபதுக்கும் மேற்பட்ட கோழிகள், நாய்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களில் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வோரையும், தெருவில் நடந்து செல்வோரையும் இந்த நாய்கள் துரத்தி வருகின்றன. நாய்களிடம் கடிபட்டு காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.நேற்று கன்னார்தெருவை சேர்ந்த காளியப்பன் (69) என்பவரை தெருநாய் கடித்தில் காயம் ஏற்பட்டது. காது அறுந்து தொங்கிய நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதே போல தனியார் மருத்துவமனைகளிலும் தினமும் நாய்களிடம் கடிபட்டு சிகிச்சைக்காக மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். மானாமதுரை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் நாய்களிடம் கடிபட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அதனை பராமரிக்கும் மையம் ஆதனூர் சாலையில் உள்ள மயான வளாகத்தில் உள்ளது. ஆனால் பல மாதங்களாக இந்த நாய்கள் பராமரிப்பு மையம் முடங்கி கிடக்கிறது. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரூராட்சி நிர்வாகம், நாய் பிடிக்கும் வண்டியை நாய்களை பிடிக்க பயன்படுத்தாமல் குப்பை அள்ளும் வாகனமாக பயன்படுத்தி வருகிறாது. இதுகுறித்து அண்ணாமலை நகரை சேர்ந்த போஸ் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதத்தில் எங்கள் வீட்டில் வளர்த்த நான்கு கோழிகளை தெருநாய்கள் கொன்றுவிட்டன. இதே போல பலரது வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகள், பூனைகள், கூண்டுகளில் வளர்க்கப்படும் புறாக்களை வேட்டையாடி வருகின்றன. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pets ,street vendors ,Manamadurai , Manamadurai, street, hunting, pets
× RELATED ஆரோக்கியத்தின் நண்பன்…செல்லப் பிராணிகள்!