×

கஜா புயல் இன்று இரவு 8 மணியிலிருந்து 11 மணிக்குள் கரையை கடக்கும் : வானிலை மைய இயக்குநர் தகவல்

சென்னை: தமிழத்தை நோக்கி வரும் கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 217 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். கஜா புயல் 17 கி.மீ. - 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி வருகிறது என்றும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும் தகவல் அளித்துள்ளார். இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் நேரடியாக புயல் பாதிப்பு இருக்காது எனவும், ஓரிரு இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

கடல் அலைகள் இயல்பைவிட ஒரு மீட்டர் வரை உயரமாக எழும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 4 மணி நேரம் நடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பின்னர் தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும், கேரளாவிலும் மழை பெய்யும் என்று தகவல் அளித்துள்ளனர். புயல் கடக்கும் நேரத்தில் கடல் அலைகள் உயரும் என்பதால், கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே தாழ்வான இடங்களில் இருப்போர் மேடான இடங்களில் தஞ்சமடையுங்கள் என்றும், பிற்பகல் முதல் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

நாகையை ஒட்டி புயல் கரையை கடக்கும் என்றும், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மைய தலைமை இயக்குநர் கூறியுள்ளார். மேலும் நாளை இரவு அரபிக்கடலை நோக்கி கஜா புயல் நகரும் என்றும் இயற்கை சீற்றங்களின் போது தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். கஜா புயலையடுத்து நாகை, கடலூர் உள்ளிட்ட அனைத்து கரையோர பகுதிகளிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர். புயல் பாதிப்பு உள்ள 7 மாவட்டங்களில் பொதுமக்கள், ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீட்டிற்கு செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் இன்று மாலை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ghazan Storm ,shore , kaja Storm, Meteorological Center, Ramesh, Heavy Rain, Tamil Nadu Government
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு