×

முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் அதிகரிக்கும் குற்றங்கள்: ஆய்வில் வல்லுநர்கள்

கோவை: முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் உதவியால், வயது வரம்பின்றி கூடாநட்பு ஏற்படுவதோடு கொலை, தற்கொலை உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என வல்லுநர்கள் கூறுகின்றனர். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு தீமையை உண்டாக்குகிறது என்று தெரிவிக்கின்றனர். பண மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்கள் மட்டுமின்றி, தற்கொலை, கொலையும் கூட சமூக வலை தளங்களால் அதிகரித்துவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள் கூட இதில் இருந்து தப்பவில்லை. மேலும் நாடுகளைத் தாண்டியும் குற்றங்கள் நீள சமூக வலை தளங்கள் காரணமாகின்றன.கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மலிங்கம் (55). இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். இலங்கை கண்டியைச் சேர்ந்த ரவீந்திரராஜா என்பவரது மனைவி மனோரஞ்சிதம்(45) ஃபேஸ்புக் மூல மாகதர்மலிங்கத்துக்கு பழக்க மாகியுள்ளார். வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர், குழந்தை இல்லாதது உள்ளிட்டவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மனோரஞ்சிதத்துக்கு, தர்மலிங்கத்தின் ஃபேஸ்புக் நட்பு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. செல்போன் மூலம் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்த நிலையில், தர்மலிங்கத்தை நேரில் காண கடந்த செப்டம்பர் மாதம் சுற்றுலா விசா மூலமாக மனோரஞ்சிதம் பொள்ளாச்சி வந்துள்ளார்.

பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனியில் வாடகை வீட்டில் இருவரும் வசித்துள்ளனர். பல சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றுள்ளனர். மனோரஞ்சிதத்தின் விசா முடிவடையும் தருவாயில், ஒருவரையொருவர் பிரிய மனமில்லாததால் தற்கொலை முடிவுக்குச் சென்றனர். இருவரும் ரயில் முன்பு பாய்ந்ததில், தர்மலிங்கம் உயிரிழந்தார். லேசான காயத்துடன் மனோரஞ்சிதம் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல்துறைத் தலைவர் முனைவர் டி.வீரமணியிடம் கேட்டபோது: பசி, தாகம், பாலுறவு ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். இதை ஆதாரமாகக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. இவற்றை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதற்கு வயது வரம்பு, திருமண எல்லைகள் போன்றவை கிடையாது என தெரிவித்தார். அரவணைப்பு கூட சிலருக்குப் போதுமானதாக இருக்கிறது. இவ்வாறு கிடைத்த உறவைக் கைவிட வேண்டிய நிலையில், தற்கொலை, கொலை போன்ற குற்றங்களைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

நடுத்தர வயதைக் கடந்துவிட்டால் தங்களது காதலை பிறரிடம் சொல்லக்கூட தயங்குவர். ஆனால் சமூக வலைதளங்கள் இந்தத் தடையை தகர்த்தெறிந்துவிட்டன. தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, பேசிப் பழகமிகப் பெரிய வாய்ப்பைக் கொடுக்கின்றன. இது குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது. செல்போன் இல்லாமல் வாழ்வே இல்லை என்ற அடிமை நிலைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தள்ளப்பட்டுவிட்டனர். பயணங்களில் மட்டுமல்ல, பக்கத்து வீட்டுக் காரரிடம் கூட பேசுவது குறைந்து விட்டது. இத்தகைய புதிய கலாச்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுறினார். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.குணசேகரன் கூறும்போது, சமூகவலைதளங்கள் தீக்குச்சியைப் போன்றவை. விளக்குப் பற்றவைக்கவும் முடியும், வீட்டைக் கொளுத்தவும் முடியும் என்று கூறினார். ஆனால், இவற்றால் நன்மைகளைக் காட்டிலும், தீமைகள்தான் அதிகம் விளைகின்றன. புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின்போது தகவல் பரிமாற்றத்துக்கு செல்போன் உதவினாலும், வதந்திகள் பரவுவதுதான் அதிகமாக உள்ளது. தவறான தகவல்கள், ஆபாச படங்களை பரப்புவது, மோசடி உள்ளிட்ட குற்றங்களுடன், கொலை, தற்கொலை வரையிலான குற்றங்களுக்கும் சமூகவலை தளங்கள் காரணமாகி வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான,
கட்டுப்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள் கட்டாயம் தேவை என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Experts , Increasing,crimes,social networks,Facebook,Whatts-Up
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...