×

வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட் ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன் இலக்கு

தாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மோமினுல் 161 ரன், முஷ்பிகுர் 219* ரன், மிராஸ் 68* ரன் விளாசினர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஜார்விஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 304 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பீட்டர் மூர்  83 ரன், பிரெண்டன் டெய்லர் 110 ரன்  விளாசினர். சதாரா  காயம் காரணமாக பேட் செய்யவில்லை. வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜிம்பாப்வே அணி 218 ரன் பின்தங்கிய நிலையில், வங்கதேச அணி பாலோ ஆன் கொடுக்காமல் நேற்று 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

அந்த அணி 54 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். முகமது மிதுன் 67 ரன் (110 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மகமதுல்லா 101* ரன், மிராஸ் 27* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 443 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்துள்ளது. கேப்டன் மசகட்சா 25, சாரி 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரெண்டன் டெய்லர் 4, வில்லியம்ஸ் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே கை வசம் 8 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 367 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,Bangladesh ,Zimbabwe , 2nd Test, Bangladesh, Zimbabwe
× RELATED சில்லி பாயின்ட்…