×

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரரை விடுதலை செய்ய மறுப்பதா? : ராமதாஸ் கண்டனம்

சென்னை: 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரரை தமிழக அரசு விடுதலை செய்ய மறுப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த சில மாதங்களில் 1457 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் சகோதரர் மாதையனை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த மனிதநேயமற்றப் போக்கு கண்டிக்கத்தக்கது. வீரப்பனின் மூத்த சகோதரரான 70 வயது மாதையன் விசாரணைக் கைதியாகவும், தண்டனைக் கைதியாகவும் கடந்த 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் பலமுறை விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மாதையன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாதையனை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கும்படி தமிழகம் அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு விடுதலை செய்ய மறுத்து விட்டது.

அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாதையனை விடுவிக்க சிறை நிர்வாகத்தின் பரிந்துரை வாரியம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனால் தான் விடுதலை செய்யப்பட வில்லை என்றும் தமிழக அரசு வாதிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. மாதையனின் வயது மற்றும் உடல்நிலையையும், அவர் செய்யாத குற்றத்துக்காக ஏற்கனவே 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார் என்பதையும் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும். மாதையனைப் போலவே தண்டனைக் காலத்தை நிறைவு செய்தோரையும், வயது முதிர்ந்தவர்களையும் விடுதலை செய்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : brother ,jail ,Veerappan ,Ramadoss , refuse to release, Veerappan's brother,jail for 25 years, Ramadoss condemned
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை