×

டெல்லி பொது போக்குவரத்திற்காக 1,000 தாழ்தள பஸ் கொள்முதல்: அமைச்சர் கைலாஷ் கெலாட் அறிவிப்பு

புதுடெல்லி: பொது போக்குவரத்தில் புதிதாக 1,000 பஸ் கொள்முதல் செய்யும் திட்டத்திற்கு மாநில போக்குவரத்து வாரிய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்து உள்ளார். டெல்லியில் அரசு தரப்பில் பஸ், தனியார் டிரைவர்களை கொண்டு கிளஸ்டர் பஸ் மற்றும் மத்திய அரசால் மெட்ரோ ரயில் என பொது போக்குவரத்து உள்ளது. அது மட்டுமன்றி ஷேர் ஆட்டோ, கிராமின் சேவா ஆட்டோ என வட்டார அளவிலும் தனியார் போக்குவரத்து கிடைப்பதுடன், கால் டாக்சி நிறுவனங்களும் உள்ளன. எனினும் மக்கள் தொகையை கணக்கிடுகையில், இப்போதுள்ள ஏறக்குறைய 6,000 பஸ் எண்ணிக்கையை 15,000 என அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டன. அதையடுத்து போக்குவரத்து உள்கட்டமைப்பு பணிகளில் ஆம் ஆத்மி அரசு தீவிரம் செலுத்தியது. 1,000 ஏ.சி பஸ், 1,000 தாழ்தள பஸ் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத 1,000 இ-பஸ் என போக்குவரத்து உள்கட்டமைப்பை அதிகரிக்க ஆம் ஆத்மி அரசு திட்டங்கள் தீட்டியும், நிதி ஒதுக்கியும், டென்டர் வெளியிட்டும் நடவடிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் எடுத்தது. அது மட்டுமன்றி இ-பஸ் கொள்முதல் திட்டத்தில் சோதனை ஓட்டங்களையும் டென்டர் விண்ணப்பித்த நிறுவனங்கள் டெல்லியில் நடத்தின. இதனிடையே சட்டசபை தேர்தல் அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு என கடந்த ஆண்டு முழுவதும், அறிவிப்புகள் அதே நிலையிலேயே நீடித்தது.இந்நிலையில், மாநில போக்குவரத்து வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவரும் அத்துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கெலாட் கூறுகையில், ‘‘1,000 எண்ணிக்கை தாழ்தள ஏ.சி பஸ் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கூட்டத்தில் ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது’’, என்றார். இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை விவரம்: பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதான தாழ்தள வசதியுடன், ஏ.சி பொருத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) எரிபொருளில் இயங்கும் 1,000 பஸ் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.கொள்முதல் செய்யப்படும் பஸ்கள், பிஎஸ்-6 தர நிர்ணயத்தில் இருக்கும். மேலும் அதில் சிசிடிவி, அபாய எச்சரிக்கை பட்டன், பஸ் பயணம் செய்யும் இடத்தை அறியும் ஜிபிஎஸ் சாதனம், ஒலிப்பெருக்கியில் வானிலை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட தகவல்களை பயனிகளுக்கு தெரிவிக்கும் வசதி என அதிநவீன ஏற்பாடுகளும் அமைந்திருக்கும். விரைவில் இந்த பஸ்கள் வாங்கப்பட உள்ளதால், கூடிய விரைவில் பயணிகளுக்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பிரச்னை தீரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கவும், கொள்முதல் செய்யப்படும் பஸ்களை 12 ஆண்டுகள் அல்லது 7.5 லட்சம் கி.மீ ஓடும் வரை பராமரிப்பதற்கான தொகையும் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூடுதல் தகவல் அளித்துள்ளார்….

The post டெல்லி பொது போக்குவரத்திற்காக 1,000 தாழ்தள பஸ் கொள்முதல்: அமைச்சர் கைலாஷ் கெலாட் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Kailash Kelat ,New Delhi ,State ,Transport ,Board ,Kailash Kelad ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்