×

அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் மாநில தலைநகரங்களில் மத்திய தலைமை செயலகம்: கட்டுமான பணிக்கு இடத்தை தேர்வு செய்ய உத்தரவு

புதுடெல்லி: மாநில தலைநகரில் உள்ள மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் கொண்டு வருவதற்காக நவீன அடுக்குமாடி கட்டிடங்கள், உச்சக்கட்ட பாதுகாப்பு வசதிகளுடன் மத்திய தலைமை செயலகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான இடங்களை தேர்வு செய்ய மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில அரசின் தலைமை செயலகம் மாநில தலைநகரங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. மேலும், அங்கு அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்குகின்றன. மாநிலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், துறை வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில் மக்களுக்கான பணிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல், மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகங்களான வருமான வரித்துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, புலனாய்வு அமைப்புகள், பாஸ்போர்ட், தபால், ரயில்வே, துறைமுகம், விமானம், கல்வி உள்ளிட்ட பல்துறைகளும் ஆங்காங்கே மாநிலத்தின் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாநில தலைநகரங்களில், மத்திய அலுவலகங்கள் ஒரே இடத்தில் இல்லாததால், தகவல் தொடர்பு மற்றும் பணிகளை விரைந்து முடிப்பதில் பிரச்னை நீடித்து வருகிறது. இதை தவிர்க்க அனைத்து மாநில தலைநகர்களிலும் மத்திய அரசுக்கென பிரத்யேக மண்டலங்களை உருவாக்கி, அங்கு மத்திய தலைமை செயலகங்களை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் மத்திய அரசு துறைகளுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? எவ்வளவு இடம் தேவைப்படும்? என்ற விபரங்களை மண்டல அதிகாரிகளிடம் மத்திய பொதுப்பணித்துறை கேட்டுள்ளது.

 அவர்கள் விபரங்களை அளித்த பிறகு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்திடம் செலவு மதிப்பீட்டுடன், முறையான திட்ட வரைவு சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘ஒரே இடத்தில் எல்லா அலுவலகங்களும் செயல்படுவதன் மூலம், மக்களுக்கும் வேலை எளிதாக முடியும், நேரமும் மிச்சமாகும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, மத்திய பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:  மத்திய அரசின் 40க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள் மூலம், டெல்லியில் இருந்து பல்வேறு திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசின் துறை சார்ந்த மாநில தலைமை அலுவலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளதை ஒருங்கிணைக்கும் விதமாக மாநில தலைமை செயலகம் போல், மத்திய தலைமை செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதியதாக அமைக்கப்படவுள்ள அலுவலகங்கள் மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலோ, அல்லது மாநில அரசிடம் நிலம் பெறப்பட்டோ, மாநில தலைநகரங்களில் மத்திய தலைமை செயலகம் அமைக்கப்படும். நவீன அடுக்குமாடி வசதிகள், உச்சபட்ச பாதுகாப்பு வசதிகள் ஆகியன இருக்கும். இதற்கான இடங்களை தேர்வு செய்ய, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். மத்திய அரசின் சிபிடபுள்யூடி கட்டுமான ஏஜென்சி, கட்டுமான பணிகளை முடித்து கட்டடங்களை பராமரிக்கும். வெளிநாட்டு உறவுகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கான அலுவலகமாகவும், மத்திய தலைமை செயலகம் இருக்கும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : department offices ,state capitals ,Central Secretariat , All department office, central secretariat, construction work
× RELATED டெல்லி மெட்ரோ ரயிலில் ஜனாதிபதி முர்மு பயணம்