×

திருச்செந்தூர் ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் : உட்கார இடமின்றி பயணிகள் அவதி

நெல்லை: முருகனின் அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூரில் நேற்று கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டனர். மாலையில் நடந்த இந்நிகழ்விற்காக நெல்லையில் இருந்து பக்தர்கள் கூட்டம் திரளாக சென்றது. இதையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. மேலும் தென்காசி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து சூரசம்ஹாரம் காண வந்தவர்கள் பாசஞ்சர் ரயில்களில் நெல்லை ரயில் நிலையம் வந்தனர்.

அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்களில் முண்டியடித்து ஏறினர். காலை 9.30 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்ற ரயிலில் நல்ல கூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக காலை 11.15 மணிக்கு திருச்செந்தூர் சென்ற ரயிலிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகளவில் திருச்செந்தூருக்கு பயணித்தது. பிற்பகல் 2 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற பழநி ரயிலும் நல்லகூட்டத்தை ஏற்றியே சென்றது. கூட்டத்தை கணக்கில் கொண்டு நெல்லை ரயில் நிலைய முன்பதிவற்ற கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு டிக்கெட்டுகள்  வழங்கப்பட்டன.

திருச்செந்தூரில் இருந்து மாலையில் நெல்லைக்கு புறப்பட்ட பாசஞ்சர் ரயிலிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சூரசம்ஹாரம் முடிந்து திருச்செந்தூரில் இருந்து நெல்லை திரும்ப பயணிகள் அந்த ரயிலை பயன்படுத்தி கொண்டனர். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் இரவு 8.50 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலிலும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த தியாகராஜநகர் செல்வக்குமார் கூறுகையில், ‘‘கந்த சஷ்டி விழாவிற்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை திருச்செந்தூரில் இருந்து இரவில் மட்டுமே இயக்குவது வழக்கமாகி வருகிறது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 10 மணியளவில் ஒரு சிறப்பு ரயிலை இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchendur Railway ,crowd , Thiruchendur, train, passenger
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...