×

குரூப் 2 தேர்வு சர்ச்சை பெரியார் குறித்து தவறான கேள்வி தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

சென்னை: குரூப் 2 தேர்வில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வினாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் நேற்று  முன்தினம் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. 1199 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை  சுமார் 6 லட்சம் எழுதினர். இத்தேர்வில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, இராஜாஜி, சி.என்.அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பது தான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், ‘இ’ என்று பிழையாகப் போட்டுள்ளனர். கேள்வியை தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் தந்தை பெரியார்.

அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டப்பட்டுள்ளது என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  மேலும் கேள்வி தாள் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.  இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு) நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஞாயிற்றுக்கிழமை(நேற்று முன்தினம்) நடந்த குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்திகள் வெளிவந்துள்ளன.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணியினை அனுபவம் மிக்க பல்வேறு பேராசிரியர்கள் செய்கின்றனர்.  மேலும், வினாக்கள் பல நிலைகளில் வேறு சில பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது. அவ்வாறு மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டும், தந்தை பெரியாரின் பெயரைத் தவறாக கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டதற்கு தேர்வாணையம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. இத்தவறுக்கு காரணமான நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிவருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் இருக்க  அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Group 2 Examination Controversy Strict ,TNPCC Announcement ,Periyar , Group 2 Examination , TNPCC A
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...