ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனத்தை ரூ.7ஆயிரம் கோடியில் விரிவுபடுத்தவும் மின்சார வாகனம் தயாரிக்கவும் திட்டம்

* முதல்வரை சந்தித்த பின் சிஇஓ அறிவிப்பு

சென்னை: ஹூண்டாய் நிறுவனத்தை ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்த உள்ளதாகவும், மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளதாகவும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒய்.கே.கூ தெரிவித்தார். சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஹூண்டாய் கார் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரி ஒய்.கே.கூ, துணைத்தலைவர் ரத்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு தலைமை செயலக வளாகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தை ரூ.7,000 கோடியில் விரிவுபடுத்த உள்ளோம். அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் கம்பெனி மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை விரிவுபடுத்துவதன் மூலம் 8 லட்சம் வாகனங்களாக உயரும். எங்கள் நிறுவனம் சார்பில் அடுத்த ஆண்டு மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.

இதற்கு அரசு எந்த மாதிரி உதவி செய்யும்?

வரி விலக்கு, மின்சாரம், தண்ணீர் வசதி, போக்குவரத்து உள்ளிட்ட வசதி செய்து கொடுப்பார்கள்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவது பற்றி...?

ஜனவரி மாதம் ரூ.7000 கோடிக்கு அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்.

ஆலை விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?

கிட்டத்தட்ட 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>