×

80 வயதை தாண்டியவர்களை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு போடத் தொடங்கினர்

சென்னை: தமிழகத்தில் 80 வயதை தாண்டியவர்களை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் நேற்று முதல் தபால் ஓட்டு போட தொடங்கினர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்க 80 வயது மற்றும் அதை தாண்டியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 18 லட்சம் பேர் 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 1,94,999 பேர் மட்டுமே தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் வாங்கி இருந்தனர். இவர்களிடம் நேற்று முன்தினம் முதல் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கை பெறும் பணியில் தேர்தல் அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி வரை இந்த பணி நடைபெறும்.இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 89 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம். இவர்களுக்கு தபால் வாக்கு போடுவதற்கான விண்ணப்பம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று 2வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகள் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பு முடிந்ததும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டியில் தங்களது தபால் வாக்கை அளித்தனர். நேற்று தபால் வாக்கை அளிக்காதவர்கள், தேர்தலுக்கு முன் நடைபெறும் மற்றொரு பயிற்சி வகுப்பில் தங்களது தபால் வாக்கை அளிப்பார்கள். மேலும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நாள் வரை வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியிலும் இவர்கள் தங்களது தபால் வாக்கை அளிக்கலாம். தபால் மூலமும் அனுப்பி வைக்கலாம். இந்த வாக்குகள் அனைத்தும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்படும்….

The post 80 வயதை தாண்டியவர்களை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு போடத் தொடங்கினர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...