×

10வது மாநில மாநாட்டிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க முடிவு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜாக்டோ ஜியோ கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலைவர்களை அழைக்க இருப்பதாக மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் தியோடர் ராபின்சன் தலைமையில், பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சண்முகநாதன், மதனா எழிலரசன், வரதராசன் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து சென்று செயல்பட்டு வந்த ஜாக்டோ-ஜியோ கடந்த 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இணைந்துள்ளதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழுவினரையும் ஆசிரியர் மன்றம் பாராட்டுகிறது.

மேலும் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், பழைய ஒய்வூதியத் திட்டத்தையே அமுல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்ட அநீதியை நீக்குதல், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் 50க்கும்  மேற்ப்பட்ட அமைச்சுப் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம்  வழங்குதல், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்குதல் பள்ளிகளிலும், 5000 அரசு பள்ளிகளை மூடுவதை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் டிசம்பர் 12ம் தேதி முதல் ஈடுபடுவது என ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ எடுத்துள்ள முடிவை ஆசிரியர் மன்றம் வரவேற்கிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் 3 வகையான ஊதியம் வழங்குவதால் மத்திய அரசு ஊதியத்தைவிட மாதம் ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்படும் வகையில் அநீதியை இழைத்துள்ளது. அக்கோரிக்கையை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர நியமிக்கப்பட்ட ஒரு நபர்க்குழுவின் பதவிகாலம் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதுவரை அறிக்கை தராத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யமுடியாது என அறிவித்திருப்பது விதிமுறைகளுக்கும் மரபுக்கும் மாறானது மட்டுமல்ல அக்குழுவை அச்சுறுத்தி தன் கருத்தை அறிக்கையாக தருமாறு வற்புறுத்தும் அதிகார வரம்பு மீறுதலாகும். அவ்வாறு வரம்பு மீறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : leaders ,TN ,Announcement ,10th State Convention: Tamilnadu Primary School , 10th State Convention, Tamilnadu Political Party, Tamilnadu Primary School Authority,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...