×

அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் வெளிநாட்டு மணல் முன்பதிவு நிறுத்தம்: 52 ஆயிரம் டன் மணல் நவ.20ல் வருகிறது

சென்னை: வெளிநாட்டு இறக்குமதி மணல் முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து 52 ஆயிரம் டன் மணல் நவம்பரில் 20ம் தேதி கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகே மணல் முன்பதிவு தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, ரூ.548 கோடி செலவில் 30 லட்சம் டன் மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில், வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டது. இதில், ஹைதரபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அந்நிறுவனம் சார்பில் முதற்கட்டமாக 56,750 மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த மணலுக்கான முன்பதிவு கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கியது.

இதையடுத்து 8ம் தேதி முதல் லாரிகளில் மணல் கொண்டு செல்லப்பட்டது. இந்த மணல் விலை அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு 150 முதல் 200 லோடு வரை மட்டுமே விற்பனையானது. இந்த நிலையில், மணல் விற்பனை தொடங்கி 50 நாட்கள் ஆன நிலையில் 51  ஆயிரத்து 991 டன் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4759 டன் மணல் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த மணல் ஓரிரு நாளில் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்காலிகமாக வெளிநாட்டு மணல் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஒப்பந்த நிறுவனம் சார்பில் 52 ஆயிரம் டன் மணல் மலேசியாவில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மணல் வரும் நவம்பர் 20ம் தேதி எண்ணூர் துறைமுகத்திற்கு வருகிறது. இந்த துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்ட பின்னர் மணல் முன்பதிவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Foreign sand, reservation, suspension,
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...