×

திருமணமானவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கணவனிடம் அடி வாங்குகின்றனர்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் திருமணமான பெண்களில் 3-ல் ஒரு பகுதியினர் கணவரிடம் அடி வாங்குவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த ‘சாகஜ்’ என்ற தொண்டு நிறுவனம், சிவில் சொசைட்டி மற்றும் தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து பாலின அடிப்படையிலான வன்முறை குறித்து ஆய்வு நடத்தியது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தகல்களை ஆராய்ந்து சாகஜ் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 27 சதவீதம் பேர், தங்களின் 15வது வயதிலிருந்து உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். ஒருபுறம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. மறுபுறம் தனிநபர்கள் சரி நிகரான வளர்ச்சியை எட்டுவதில் ஜாதி மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடுகளை சந்திக்கின்றனர்.

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் கணவரின் வன்முறைக்கு ஆளாகின்றனர். கணவர் அடிக்கும் வழக்கத்தை பல பெண்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. அது சகஜம் என ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆணாதிக்கம் என்பது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான பாகுபாடாக பிரதிபலிக்கிறது. குழந்தை பெற்றுக் கொள்பவர்களாக மட்டுமே பெண்கள் பார்க்கப்படுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ வசதி குறைவாகவே கிடைப்பது கவலையளிக்கிறது. பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தியும், ஆணாதிக்க போக்கால் பெண்களின் சமூக அந்தஸ்து தொடர்ந்து குறைவாகவே மதிப்பிடப்படுகிறது.

இதன் காரணமாக பெண்களின் சுகாதாரம், இறப்பு விகிதம், பிறப்பு விகிதம் மோசமான நிலையில் உள்ளது. புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் அமல்படுத்தியதால், அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பெண்களின் பங்களிப்பு உரிமையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், முழுமையான மாற்றம் இன்னும் ஏற்படவில்லை. ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கை அடைய இந்தியா இன்னும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,husbands , Married, women, husband, feet
× RELATED திருச்சி அருகே அறுந்து கிடந்த...