×

ஒழுகும் மேற்கூரை.. இட நெருக்கடி.. உடைந்த ஜன்னல், கதவுகள்.. பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையம்

அம்பத்தூர்: அம்பத்தூர் காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ, 15 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 சிறிய அறைகள் மட்டுமே கொண்ட இந்த காவல் நிலைய கட்டிடத்தில், ஒரு அறையை இன்ஸ்பெக்டரும், மற்றொரு அறையை சக பெண் காவலர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.  இங்கு, ஆவணங்களை பாதுகாக்க தனி அறை, கழிப்பறை, கைதி அறை, புகார்களை விசாரிக்க எஸ்.ஐக்கு அறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. இதில் சில சமயங்களில் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் காயம் அடைவதும் உண்டு. ஜன்னல்கள், சுவிட்ச் பாக்ஸ், கதவுகள் உடைந்து கிடக்கிறது.
தற்போது, அடிக்கடி பெய்து வரும் மழையால் மேற்கூரை விரிசல் வழியாக தண்ணீர் ஒழுகுவதால், பதிவேடுகள் நனைத்து பாழாகி விடுகிறது. கைதி அறை இல்லாததால் விசாரணைக்கு வரும் பெண் கைதிகளை, அம்பத்தூர் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில் தான் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘இங்கு வரும் பெரும்பாலான புகார்களை எஸ்.ஐ தான் விசாரணை செய்வார். ஆனால், அவருக்கு கூட தனி அறை இல்லை. ஆவணங்களை பாதுகாக்க தனி அறை இல்லாததால் பல முக்கிய பதிவேடுகள் திடீரென மாயமாகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பெண் காவலர்களுக்கு தனி கழிவறை இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். சிறிய அறை என்பதால், அன்றாட பணிகளை சிரமத்துடன் செய்யும் நிலை உள்ளது. விசாரணைக்கு வரும் பொதுமக்கள் உட்கார கூட இடவசதி கிடையாது. பெண் காவலர்களுக்கு ஒய்வு அறை இல்லாததால் அவர்கள் சீருடைகளை மாற்ற முடியாமலும், உணவு உட்கொள்ளவும், ஓய்வு எடுக்கவும் முடியாமல் தினமும் அவதிப்படுகின்றனர்,’’ என்றனர்.

16 ஆண்டாக முறையிட்டும் சொந்த கட்டிடம் இல்லை
கடந்த 2002ம் ஆண்டு இந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் அரசால் உருவாக்கப்பட்டது. அப்போது, உடனடியாக புதிய கட்டிடம் கட்ட முடியாததால், தற்போதுள்ள கட்டிடத்தில் மகளிர் காவல் நிலையம் செயல்பட தொடங்கியது. ஆனால், இன்று வரை மகளிர் காவல் நிலையத்துக்கு தனி கட்டிடம் கட்டி தரவில்லை. இதனால், குறுகிய கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இன்றி போலீசார் சிரமப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அனுப்பியும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இடியும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crash ,police station ,building ,women , Ambattur Women's Police Station
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...