×

கடலூரில் இருந்து புதுவைக்கு நூதனமுறையில் மணல் கடத்தல்

கடலூர்: கடலூர் ரெட்டிச்சாவடி சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பாபு உள்ளிட்ட போலீசார் நேற்று ரெட்டிச்சாவடி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர் அப்போது, அந்த வழியாக புதுச்சேரி நோக்கி வேகமாக  சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் டிரைவர் இருக்கை மட்டுமே இருந்தது. இதர இருக்கைகள் கழற்றப்பட்டு வாகனம் முழுவதும் மணல் நிரப்பப்பட்டிருந்தது. விசாரணையில், கடலூர் சூரிய வெப்பம் பெண்ணையாற்று பகுதியிலிருந்து நூதன முறையில் மணலை கடத்தி புதுச்சேரியில் விற்பனை  செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்திய காரின் உரிமையாளர் புதுச்சேரி குருவிநத்தத்தை சேர்ந்த புருஷோத்தமன் (42), டிரைவர் சேலியமேட்டை சேர்ந்த சரத்குமார் (24) ஆகிய 2 பேரையும்  போலீசார் கைது செய்தனர். இதில் புருஷோத்தமன் மீது ஏற்கனவே ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் பல்வேறு மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில்
உள்ளது.

இந்நிலையில் அவர் மீண்டும் காரில் ஆற்று மணல் கடத்திய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் சாராயம் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை ஆகியவற்றுக்காக புருஷோத்தமன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் நடத்திய தொடர்  விசாரணையில் ஆற்றை ஒட்டிய கிராமப்பகுதிகளில் இருந்து சிலர் ஆற்று மணலை திருடி மூட்டை கட்டி மொபட் மூலம் தங்கள் வீடுகளில் சேர்த்து வைப்பதும், அவற்றை மொத்தமாக  புருஷோத்தமனிடம் விற்பனை செய்வதும்,  பின்னர் புருஷோத்தமன் புதுச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்து வருவதும் கண்டறியப்பட்டது. காரில் நூதனமான முறையில் மணல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tracts ,Cuddalore ,Pondicherry , Cuddalore, Puduvai, innovative, sand smuggling
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...