×

சர்கார் பிரச்னை முடிந்துவிட்டது இனி பெரிதுபடுத்த வேண்டாம்: முதல்வர் பேட்டி

கோவை: ‘சர்கார் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. இனி பெரிதுபடுத்த வேண்டாம்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் கூறினார். திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவர், கோவை விமான நிலையத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். டிடிவி தினகரன் மாபெரும் துரோகி. தமிழக மக்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் மூன்று பேரை விடுவிக்க தமிழக அரசு சார்பில் கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டணை பெற்று வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேர் விடுதலைக்கு இறுதிமுடிவு கவர்னர்தான் எடுக்கவேண்டும்.  

தமிழகத்துக்கு தேவையான மக்கள் நல திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். இதில், தவறு ஏதும் இல்லை. காலத்திற்கு ஏற்றபடி சந்திரபாபு நாயுடு பச்சோந்திபோல் மாறிக்கொள்கிறார். விவசாய நிலங்களில் மின்சார டவர்  லைன் அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது தேவையான இழப்பீடு வழங்கப்படும். சில நடிகர்கள் விலையில்லா பொருள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர். சர்கார் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. இனி இதை பெரிதுபடுத்த வேண்டாம். டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காமல், மக்கள் அலட்சியமாக இருப்பதால் காய்ச்சல் பரவுகிறது. கமல், 64 வயது வரை திரைப்படத்தில் நடித்துவிட்டு இப்போது அரசியல் நாடகம் ஆடுகிறார். கமலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarkar ,Chief Minister , Sarkar,problem,over,exaggerated,Chief Minister,interviewed
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்