×

விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழகத்தில் ‘நீரா’ பானம் விற்பனைக்கு வருவது எப்போது? போதிய விழிப்புணர்வு இல்லாமல் திட்டம் முடங்கும் அபாயம்

வேலூர்: தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் நெல், கரும்பு வாழை உள்ளிட்ட மானாவாரி பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதுடன், தென்னை விவசாயமும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வறட்சியின் காரணமாக அபாயத்தை சந்தித்துள்ளது. இருக்கும் தென்னை மரங்களை வைத்து விவசாயிகள் லாபம் சம்பாதிக்கும் வகையில் அண்டை மாநிலமான கேரளாவை பின்பற்றி தென்னையில் இருந்து நீரா பானத்தை இறக்கி விற்பனை செய்ய விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  நீரா என்பது பதநீர் போல ஒரு இனிமையான உடல்நல பானமாகும். வெடிக்காத பாளைகளில் இருந்து வடித்தெடுக்கப்படும் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த நீராபானம் தாது உப்புகளும், வைட்டமின் சத்துகளும் நிறைந்தது. தென்னம்பாளையில் இருந்து வெடிக்கும் நிலையில் இருக்கும்போது நீரா வடித்து எடுக்கப்படும்.

நீரா கசிந்து சொட்ட 15 நாட்கள் வரை பிடிக்கும், ஆண்டு முழுவதும் தென்னை மரங்களில் இருந்து இந்த பானம் கிடைக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு மரத்தில் இருந்து 2 லிட்டர் நீரா பானம் கிடைக்கும். வறட்சியால் ஏற்கனவே தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் தென்னை மரங்களை காக்கவும், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கவும் நீரா பானத்தை இறக்குவதற்கு அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழக அரசு முன்னிலை வகிக்கிறது. அதற்கேற்ப தமிழகத்தில் 1.5 லட்சம் விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில்  ‘நீரா’ உற்பத்திக்கு முன்பு அனுமதி இல்லை. தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘நீரா’ எடுக்க  உரிமம் வழங்கி அனுமதியளித்துள்ளது. முதலில் பொள்ளாச்சியில் நீரா பானம் உற்பத்திக்கான தொழிற்சாலை அனுமதி அளித்து 3 மாதங்களில் சந்தையில் இது கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் மாநிலம் முழுவதும் விவசாயிகள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநிலம் முழுவதும் 15 கோடி தென்னை மரங்கள் உள்ளன. எனவே,  தேங்காய் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு மாதத்தில் 6  மாதங்கள் மட்டும் குலை கட்ட முடியும். அடுத்த 6 மாதங்களில் தேங்காய்  உற்பத்தி அதிகமாகும். இதனால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
‘நீரா’ உற்பத்தியை நெறிமுறைப்படுத்த, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நோய் எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்தி, ‘நீரா’ உற்பத்தி அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அறிவித்து பல மாதங்களாகியும்  இன்னும் பெயரளவில் மட்டுமே பணிகள் நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ‘நீரா’ பானம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க அனுமதியளிக்கும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பணிகள் தொடங்கப்பட்டன. ‘நீரா’ பானம் தென்னை விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரும். வைட்டமின் ஏ, பி, சி மற்றும் சர்க்கரை சத்து குறைவாகக் கொண்ட பானம், இதை மக்கள் அதிகளவில் வாங்கிப் பருகுவார்கள். ‘நீரா’ பானத்தை இறக்கி, சந்தைப்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருந்தால் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது போதை பொருள் கிடையாது. சர்க்கரை சத்து குறைவான, தாய்ப்பாலுக்கு இணையான பானம்.

இதை அருந்தினால் மக்கள் ஆரோக்கியமாக வாழலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த பானம். டெட்ரா பேக்கில் அடைக்கப்பட்டு விற்கப்படும். இங்கு பயன்படுத்தப்படும் குளிர்பானங்களில், ‘நீரா’தான் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்னிய செலாவணியையும் ‘நீரா’ பானம் ஈட்டித்தரும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நீரா பானம் தொடர்பாக விவசாயிகளிடம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் நீரா பான தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து தெரியாமல் இந்த திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nira ,Tamil Nadu , Farmers, Tamilnadu, adequate awareness
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...