×

இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடும் விவகாரம் பாஜ தலைவரிடம் ஆலோசனை கேட்டேனா? சபரிமலை தந்திரி விளக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்கள் வந்தால் கோயிலை மூடுவது தொடர்பாக, பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளையிடம் நான் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் தேவசம்போர்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். சபரிமலையில் கடந்த ஐப்பசி மாத பூஜையின்போது கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் டிவி நிருபர் கவிதா ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் போலீசார் சன்னிதானத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து சபரிமலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அப்போது இளம்பெண்கள் தரிசனத்திற்கு வந்தால் சபரிமலை கோயில் நடையை மூடிவிடுவேன் என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறினார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகே போலீசார் இளம்பெண்கள் இருவரையும் திரும்ப பம்பை அழைத்து வந்தனர். தந்திரியின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநில பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கட்சி கூட்டத்தில் பேசுகையில், தந்திரி கண்டரர் ராஜீவரர் தன்னிடம் ஆலோசித்த பின்னரே சபரிமலை நடையை மூடுவதாக அறிவித்தார் என்று கூறினார்.

இந்த பேச்சுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தந்திரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து தந்திரி கண்டரர் ராஜீவரர் தேவசம் போர்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சபரிமலையில் ஆச்சார விதிமீறல் நடந்தால் கோயிலை மூடுவது தொடர்பாக பாஜ தலைவர் ஸ்ரீதரன்பிள்ளையிடம் நான் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவருடன் மட்டுமல்லாமல் வேறு யாருடனும் நான் சட்ட ஆலோசனை பெறவில்லை.

சபரிமலையில் ஆச்சார விதிமீறல் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பந்தளம் அரண்மனையில் இருந்து எனக்கு முறையான உத்தரவு வந்தது. சபரிமலையில் ஆச்சார விதிமுறை நடந்தால் என்னென்ன பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்பது குறித்து தந்திரி என்ற நிலையில் எனக்கு நன்றாக தெரியும். இதுதொடர்பாக வேறு யாரிடமும் எனக்கு ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை. எனது பதவிக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் நான் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ladies ,BJP ,Sabarimala Tantry , Sabarimala, women's affairs, BJP, tantri, Kandarar Rajeevar, Devasamboad
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து