×

நவபாஷாண கடற்கரையில் நவக்கிரக சிலைகள் சேதம் பக்தர்கள் வேதனை

ராமநாதபுரம் : கடலில் நவக்கிரகங்கள் சங்கமித்துள்ள புராதன சிறப்பு வாய்ந்த தேவிபட்டினம் கடற்கரையில் நவபாஷாண நவக்கிரகங்கள் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவிபட்டினத்தில் கடலடைத்த பெருமாள் திருக்கோயில் உள்ளது. சூரிய, சந்திர, குரு, சனி, ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளதால் பிதுர் காரியங்கள், திருமணதடை, தொழில்தடை போன்றவற்றுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

கடற்கரையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கடலில் நவக்கிரகங்கள் சிலை அமைந்துள்ளதால் அதனை தொட்டு பூஜைசெய்ய ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் இடுப்பளவு தண்ணீரில் சென்று பிரார்தனை செய்து வந்தனர். கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் இதனை தரிசிக்க சிறிய படகுகள் மூலமாக அப்பகுதிக்கு சென்று தரிசித்து வந்தனர். இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால் பக்தர்கள் வசதிக்காக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அழகிய நடைபாலம் அமைக்கப்பட்டது. பக்தர்கள் இந்த பாலத்தில் நடந்து சென்று கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்களுக்கு பூஜை செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரக சிலைகள் பராமரிப்பு இல்லாததால் தற்போது சேதமடைந்து வருகிறது. இதனால் கடல்நீர் சிறிது கூடினாலும் அனைத்து சிலைகளையும் மூடி விடுகிறது. 9 சிலைகளில் 5 சிலைகள் முற்றிலும் சேதமடைந்து கடலுக்குள் இருப்பதால் பக்தர்கள் சிலை உள்ள பகுதியில் நின்று மட்டுமே பூஜை செய்து வருகின்றனர். விரைவில் நவக்கிரக சிலைகளை புனரமைத்து வழிபட பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தேவகோட்டையை சேர்ந்த பெண் பக்தர் மீனாட்சி கூறுகையில், ‘பிரசித்தி பெற்ற இந்த திருத்தலத்தை காண தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நவக்கிரகத்தை காண வரும் பக்தர்கள் கடலுக்குள் இறங்கு ஏற்கனவே சிலைகள் இருந்த இடத்தில் நின்று வழிபடுகின்றனர். சிலைகள் சேதமடைந்து கடலுக்குள் உள்ளதால் சிலைகளை காண முடியவில்லை. இதனால் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். சேதமடைந்துள்ள சிலைகளை சரிசெய்ய கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devotees ,beach ,Navapashana , Navabashana Sea,Navagraha Temple,Devotees, ramnad
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...