×

சட்டீஸ்கரில் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு

நக்சல்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் மக்களை கட்டுப்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஜத்கல்பூர்: காங்கிரஸ் கட்சி நகரத்தில் வாழும் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.  சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 12் மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாஜ, காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. இம்மாநிலத்தில் பிரதமர்  மோடி தனது முதல் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினார். பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஜத்கல்பூரில் பாஜ தேர்தல் பிரசார பேரணியும், பொதுக்கூட்டமும் நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு  பேசியதாவது:  நக்சல்களால் பாதிக்கப்பட்ட பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு போதுமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை. மாவோயிஸ்டுகள் நகரங்களில் மிகவும் சுகாதாரமாக, குளிரூட்டப்பட்ட வீடுகளில்  வசித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர்.

ஆனால், நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் குழந்தைகளை ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல் தங்கள் கட்டுப்பாட்டில்  வைத்துள்ளனர். ‘நகரங்களில் வசிக்கும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல், ஏன் ஆதரவு தருகிறீர்கள்?’ என காங்கிரசை நான் கேட்க விரும்புகிறேன். தண்டேவடா மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி நக்சல்கள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் கேமராமேன் பரிதாபமாக கொல்லப்பட்டார். பஸ்தார் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்ததை தவிர, அவர் செய்த தவறு என்ன?  போதுமான வளர்ச்சி செய்து தராத முந்தைய அரசை நீங்கள் மன்னிப்பீர்களா? ‘வளமான சட்டீஸ்கர்’ என்ற மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயின் கனவை நிறைவேற்றும் வரை எனக்கு ஓய்வு கிடையாது. இவ்வாறு மோடி  பேசினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி: ராகுல் அறிவிப்பு
பகன்ஜோர்: ‘‘சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் 10 நாளில் தள்ளுபடி செய்யப்படும்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  சட்டீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பண்டிட் சைம பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: சட்டீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இயற்கை வளங்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், இதன் பயன்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கவில்லை.  அவை பிரதமர் மோடி மற்றும் சட்டீஸ்கர் முதல்வரின் நண்பர்களின் தொழிற்சாலைகளை சென்றடைகிறது. டெல்லியில் மோடிக்கு 10 முதல் 15 தொழிலதிபர் நண்பர்கள் உள்ளனர்.

அதேபோல், சட்டீஸ்கர் முதல்வருக்கும் 15 தொழிலதிபர்கள் நண்பர்களாக உள்ளனர். இவர்களின் அனுமதி இல்லாமல் மோடியும், ராமன் சிங்கும் எந்த வேலையும் செய்வதில்லை.  மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவு செய்தது. இதன் மூலம், நாட்டில் பல மக்களின் வாழ்க்கை தரம்  மாறியது. ஆனால், மோடி 15 தொழிலதிபர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி கடனை கடந்த நாலரை ஆண்டுகளில் தள்ளுபடி செய்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையில் 10 ஊரக வேலைவாயப்பு திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம்.  சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன் 10 நாளில் ரத்து செய்யப்படும்.  இவ்வாறு ராகுல் கூறினார்



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattisgarh , Chhattisgarh, election campaign
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!