×

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: அன்புமணி கண்டனம்

சென்னை: ‘வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் வௌிப்படைத்தன்மை இல்லை’ என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வரும் ராமசாமி 15ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதைத்தொடர்ந்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.  துணைவேந்தர் பதவிக்கு 55 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் இருந்து முதல்கட்டமாக 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதிலிருந்து, 3 பேரை தேர்வு செய்வதற்காக சென்னையில் நாளை நேர்காணல் நடைபெற உள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானோர் துணைவேந்தர் பதவிக்கு தகுதியற்றவர்கள். இதில் இடம்பெற்றுள்ள  முனைவர் இ.வடிவேலு என்பவரை துணைவேந்தராக நியமிக்கத் தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவர், ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் ஆதரவுடன்தான் இவர் துணைவேந்தராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய  வேளாண் மேம்பாட்டுத் திட்டம், பசுமைக்குடில் திட்டம், துல்லியப் பண்ணைத் திட்டம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்தவர். இதுதொடர்பாக இவர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவு முதற்கட்ட விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முனைவர்கள் கீதாலட்சுமி, குமார் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை. இந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர்களின் பெயர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதன்  மூலம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வரும் பல்கலையை சீர்குலைக்கும் வகையில் புதிய துணைவேந்தர் நியமனம் அமைந்து விடக்கூடாது.எனவே, இப்போதுள்ள துணைவேந்தர் தேர்வுக்குழுவை உடனடியாக கலைத்து விட்டு,  அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட கல்வியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட புதிய தேர்வுக்குழுவை அமைத்து வெளிப்படையான முறையில் துணைவேந்தர் தேர்வை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vice Chancellor ,Dhammani ,Agricultural University , Vice Chancellor of Agriculture University, Dhammani
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. டிரோன்...