×

மீஞ்சூரில் போலீஸ் ஆதரவுடன் விற்பனை 85 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: பூந்தமல்லி குடோனுக்கு போலீஸ் சீல்

சென்னை: சென்னை அடுத்த மீஞ்சூர், புழல் பகுதியில் போலீஸ் ஆதரவுடன் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 85 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. மீஞ்சூர் மற்றும் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதை பொருட்கள் போலீஸ் ஆதரவுடன் தாராளமாக விற்பதாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜூக்கு தொடர்ந்து புகார்கள்  வந்தன.  இதனால் உளவுப் பிரிவு போலீசாரை ஐஜி முடுக்கிவிட்டார். விசாரணையில், பஞ்ச பாண்டவர்களில் பலசாலியானவரின் மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு எஸ்.ஐ. ஆதரவுடன்தான் குட்கா மற்றும் போதைப் பொருள்கள் அதிக  அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால், குடோனில் சோதனை நடத்த ஐஜி நாகராஜ் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் ₹5 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த ஒருவரை கைது செய்தனர். இந்த குட்கா பொருட்கள் வடமாநில மக்கள்  பயன்படுத்தும் குட்கா வகையைச் சேர்ந்தது என்றும் இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் நிறைய வட மாநிலத்தவர்கள் வேலை செய்து வருவதால் அவர்களிடம் விற்பதற்காக இந்த குட்காவை கொண்டு வந்து அத்திப்பட்டு  மீஞ்சூர் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மீஞ்சூர் எஸ்.ஐ. பணத்தை வாங்கிக் கொண்டு போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. மேலும், குட்கா பதுக்கி வைத்திருந்தவர் சென்னை சவுக்கார்பேட்டையைச் சேர்ந்தவர் என்றும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இங்கு வாடகைக்கு வந்தததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீஞ்சூர்  பகுதிகளில் மட்டும் கடந்த சில மாதங்களில் இது போன்று 5 க்கு மேற்பட்ட முறைகளில் பல லட்ச மதிப்பிலான குட்கா டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் அப்படி இருந்தும் பெட்டிக்கடைகளில் கூட சர்வ  சாதாரணமாக ஹான்ஸ், குட்கா மாவா தாராளமாக கிடைப்பதால் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.அதேபோல, சென்னை அடையாறு  பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி விற்பனை செய்து வந்ததாக புருஷோத்தமன் என்பவரை அடையாறு தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வந்த பல குட்கா குடோன்களை போலீசார் கண்டு பிடித்து வருகின்றனர்.  இந்நிலையில் புருஷோத்தமன் கொடுத்த தகவலின் அடிப்படையில், நேற்று காலை அடையாறு துணை கமிஷனர் ஷெசாங் சாய் தலைமையில் தனிப்படை போலீசார் பூந்தமல்லியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள  தனியார் குடோனை சுற்றிவளைத்தனர். அப்போது 4 லோடு ஆட்டோவில் வந்த நபர்கள் குடோனுக்குள் சென்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களைப் பின்தொடர்ந்து குடோனுக்குள் சென்றனர். இது குறித்து  பூந்தமல்லி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்த இணை ஆணையர் விஜயகுமாரி, துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் செம்பேடு பாபு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதையடுத்து அந்தக் குடோனை சோதனை செய்தபோது அங்கு பதுக்கி வைத்திருந்த 80 லட்சம் மதிப்புள்ள 10 டன் குட்கா மூட்டை மூட்டையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார்  பூந்தமல்லி போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு பதுங்கியிருந்த 5 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இந்த குடோனை செந்தில் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் குட்காவை பதுக்கி வைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. கடந்த மாதம் மாங்காட்டை அடுத்த  கெருகம்பாக்கத்தில் ஒரு குடோனில் 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த குடோனையும் இதே செந்தில்தான் வாடகைக்கு எடுத்து குட்கா பதுக்கி வைத்திருந்தார்  என்றும், தற்போது அவர் தலைமறைவாக இருப்பதும்  விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செந்திலின் சகோதரர் நசரத்பேட்டையைச் சேர்ந்த முத்துலிங்கம் (32), சாத்தான்குளத்தை சேர்ந்த செபஸ்டின் (19), குமார் (18), ஐசக் (20), செந்தில் (39) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து  வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கார், 4 லோடு ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poonamallee Gudon , Gudka confiscation, police seal
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...