×

சில காட்சிகள், வசனங்கள் நீக்கம் சர்கார் பிரச்னை தீர்ந்தது: அனைத்து தியேட்டர்களிலும் படம் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் குவிகின்றனர்

சென்னை: சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டதால், அனைத்து தியேட்டர்களிலும் நேற்று வழக்கம்போல படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் திரண்டு வந்து படத்தை ஆர்வமுடன்  பார்த்தனர். தீபாவளியன்று உலகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்டது. இந்தப் படம் திரையிடப்பட்ட முதல் நாளே பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த  நாட்களிலும் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கு எதிராக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிட்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சில காட்சிகளை நீக்க  வேண்டும் என்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் நடிகர் விஜய்  கட்அவுட்டுகளை அதிமுகவினர் உடைத்தனர். இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஒரு சில இடங்களில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சர்கார் படத்தின் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.  தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் சர்கார் படம் திரையிடப்பட்டன. ரசிகர்கள் வழக்கம்போல ஆர்வமாக தியேட்டர்களில் குவிந்தனர். முதல்நாள் திரையிடப்பட்டபோது வந்த கூட்டம் போல ஆர்வமுடன் வந்து படத்தை  பார்த்து விட்டுச் சென்றனர்.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘‘பலரது வேண்டுகோளின்படி சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் மற்றும்  தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனங்களுடன் பேசினோம். அவர்களும் படத்தின் சில காட்சிகளை நீக்க சம்மதித்தனர். அதன்படி, சில காட்சிகளை நீக்கி, சான்றிதழ் வழங்கும்படி தணிக்கை குழுவை கேட்டுக் கொண்டோம். அவர்கள்  நேற்று காலையில் காட்சிகளை நீக்கினர். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதனால்தான், சில காட்சிகளை நீக்கியுள்ளோம். இதைத் தொடர்ந்து மதியம் முதல் மாநிலம் முழுவதும் சர்கார் படம்  திரையிடப்பட்டது. வழக்கத்தை விட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து படத்தை பார்த்து விட்டுச் செல்கின்றனர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : theaters ,fans , Some scenes, dismissal, sarkar problem, fans
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...