×

பெருங்குடி, துரைப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு .... மண்டல அலுவலகத்தை தேமுதிகவினர் முற்றுகை

துரைப்பாக்கம்: சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை, துரைப்பாக்கம், கண்ணகிநகர் உள்ளிட்ட பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தை தேமுதிக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை, துரைப்பாக்கம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகள் மிகவும் தாழ்வாக இருப்பதால், ஆண்டுதோறும் மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு மழைக்காலமே இன்னும் தொடங்காத நிலையில் இந்த பகுதிகளில் ஆங்காங்கே இருக்கும் பள்ளத்தில் சமீபத்தில் பெய்த லேசான மழை காரணமாக தண்ணீர் தேங்கி, தற்போது கழிவுநீராக மாறி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் பெருகி பலர் டெங்கு, பன்றி மற்றும் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை கண்டிக்கும் விதமாகவும் உடனே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி நேற்று காலை தென் சென்னை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பிரபாகரன் தலைமையில், 100க்கு மேற்பட்டோர் சோழிங்கநல்லூர் 15வது மண்டல அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். தகவலறிந்து, மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் நிறைவேற்ற வேண்டிய பணி குறித்து மனு கொடுத்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perungudi ,zone office ,downtown , health disorder, DMDK, perungudi
× RELATED சென்னையில் 10 கிலோ தங்கம் பறிமுதல்