×

தாராசுரம் கோயில் பூங்காவில் காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சடலிங்கம் மகன் குருமூர்த்தி (21). கூலி தொழிலாளியான இவரும், பட்டீஸ்வரம் கோபிநாதபெருமாள் கோயிலை சேர்ந்த  ராஜேந்திரன் மகள் ராஜலட்சுமியும் (19) 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு குருமூர்த்தி, தனது நண்பரான அமுதபிரியனை (21) அழைத்து கொண்டு தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்துக்கு சென்றார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பூங்காவில் காதலி  ராஜலட்சுமியுடன் குருமூர்த்தி பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் அரிவாளுடன் வந்த ஒருவர் குருமூர்த்தி, ராஜலட்சுமியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இதை தடுக்க வந்த அமுதபிரியனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும்  தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த குருமூர்த்தி, ராஜலட்சுமியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜலட்சுமியின் நிலைமை மோசமடைந்ததால்  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், `கும்பகோணத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் 6 மாதத்துக்கு முன் குருமூர்த்தியும், ராஜலட்சுமியும் வேலை பார்த்து வந்தனர். அதன்பிறகு வேறு இடத்தில் கூலி வேலைக்கு குருமூர்த்தி சென்றுவிட்டார். முன்னதாக ராஜலட்சுமியை ஒரு தலையாக சிலர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமி தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற  ஆத்திரத்தில் யாராவது தாக்குதலில் ஈடுபட்டனரா அல்லது வேறு காரணமா  என்று விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Darasuram Temple park , Darasuram ,Temple Zoo, romantic, couple
× RELATED புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!