×

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: முருகன், கருப்பசாமி மனுதாக்கல்

விருதுநகர்: நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்  திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகி, மதுரை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதி லியாகத் அலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி, முருகன்,  கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கான முகாந்திரங்களும் இல்லை; எனவே வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் எனக்கூறி முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்களது  வழக்கறிஞர்கள் மூலம் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இதனைத்தொடர்ந்து மூவரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில், இவ்வழக்கு விசாரணையின்போது நடந்த சில சம்பவங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இவ்வழக்கின் முக்கிய நபரான நிர்மலாதேவியிடம், 3 உயரதிகாரிகள் நீண்ட விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் நிர்மலாதேவியிடம், முதல் கட்டமாக விசாரணை நடத்தி முக்கிய கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த தபதில்களை கேட்டவர்கள், ‘‘இதனை வெளியில் சொல்லக்கூடாது. நாங்கள் சொல்வதை  மட்டும்தான் கூற வேண்டும்’’ எனக்கூறியதாக சிறைத்துறை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த ஏப்.16ம் தேதி மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவியிடம் சந்தானம் கமிஷன்  விசாரணை நடத்தி விட்டு சென்றது. அப்போது இவ்வழக்கில் முருகன், கருப்பசாமியை தவிர வேறு யாரையும் கொண்டு வரக்கூடாது.  யாரைப்பற்றியும் பேசக்கூடாது. முக்கியமாக ‘மேலிடங்களை பற்றி பேசக்கூடாது’’ என்று கூறியதாக கூறப்படுகிறது.முன்னதாக, அருப்புக்கோட்டையில் நிர்மலாதேவி கைதான அன்று இரவு, ஒரு காவல்துறை உயரதிகாரி 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். அவர் எந்த மாதிரி பேச வேண்டுமென சொல்லி கொடுத்தாரோ, அதையே  விருதுநகரில் சிபிசிஐடி உயரதிகாரியும், சந்தானம் குழுவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murugan ,Nirmaladevi ,Karuppasamy , Nirmaladevi, professor,sexually impaired, Murugan, Karuppasamy
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...