×

அனைத்து மாநில கட்சி, தேசிய தலைவர்களை ஒருங்கிணைக்க மு.க.ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு: பாஜவுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சியில் தீவிரம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு எதிராக அகில இந்திய அளவில் வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் அனைத்து மாநில கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும்  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.  தேசிய அரசியலில் பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்குவதில் திமுக தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலம் முதல் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. பிரதமராக வாஜ்பாய்,  வி.பி. சிங் போன்றவர்களை உருவாக்குவதில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார். அதேபோல சோனியா காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தேசிய தலைவர்களிடம் ஒருமித்த கருத்தை கருணாநிதி உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் பதவி  ஏற்பதிலும் முக்கிய பங்காற்றினார்.

கருணாநிதியை தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தேசிய அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பாஜவுக்கு எதிராக  வலுவான அணியை அகில இந்திய அளவில் உருவாக்க மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.இதையடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை 6 மணிக்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அதை தொடர்ந்து சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு சந்திரபாபு நாயுடு  செல்கிறார். அங்கு மாலை 6.30 மணியளவில் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். சந்திப்பின்போது அகில இந்திய அளவில் வலுவான கூட்டணி அமைப்பது குறித்து பேசி முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். அவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி வருகிற 13ம் தேதி சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச இருக்கிறார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்கு தள்ளிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று!. வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி  வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு பறிபோனதோடு, சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின்  பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது!. நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrababu Naidu ,leaders ,state ,MK Stalin ,Strong Alliance ,BJP , national leaders, coordinate, MK Stalin,Strong , BJP
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....