×

சர்கார் திரைப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு

சென்னை: சர்கார் பட காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரை அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் நேற்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் திரைப்படம் எடுப்பவர்களுக்கு குறிப்பாக நடிகர்களுக்கு ஒரு பேஷன் ஆகி போச்சு. ஜெயலலிதா இல்லாததால் ரொம்ப குளிரும் விட்டுப்போச்சு. ஜெயலலிதா இருக்கும்போது இந்த மாதிரி ஏதாவது படத்தில் கருத்து  கூறப்பட்டதா என்று யோசிக்கணும். ஒரு கொள்கையை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த அடிப்படையில் சமுதாயத்தில் கருத்துக்களை பிரதிபலிப்பதாக திரைப்படம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஒரு திரைப்படம்  என்பது மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லும் சாதனமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர் படங்களில் எந்த காலத்திலாவது இப்படி ஒரு பிரச்னை வந்ததா? இன்னும் எம்ஜிஆர் புகழ் உலகம் முழுவதும் பேசப்படுகிறது.  இவர்களும் எம்ஜிஆர் போன்று வந்துவிடலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். யாரும் அப்படி வர முடியாது.

சமுதாயத்துக்கு மாறுபட்ட கருத்தாக, மக்கள் மனதை புண்படுத்துவதாக இருந்தால் நிச்சயமாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோன்று, திரைப்பட குழு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களை பொறுத்தவரை ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்பட்ட அந்த பெயரை ஏன் படத்தில் வைக்க வேண்டும். மறைந்த தலைவர் பெயரை வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சியுடன் இழிவுபடுத்தும் செயலாகத்தான் இதை  கருத முடியும். நிச்சயமாக மனதை புண்படுத்தும் செயலை எந்த நிலையிலும் ஏற்க முடியாது.
பண மதிப்பிழப்பு விஷயத்தில் மத்திய அரசு ஒரு முடிவு எடுக்கிறது. இதுபோன்ற எந்த சீர்திருத்த நடவடிக்கையானாலும் சரி அந்த முடிவை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாதது பற்றி மக்களே இறுதி முடிவு செய்வார்கள்.  இதற்கு 2019ம் ஆண்டு விடை கிடைக்கும். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவில் தெரியும். அதிமுகவையும் அமமுகவையும் இணைப்பதற்கு  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தனியரசு தெரிவித்திருப்பது கானல்  நீராகத்தான் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சசிகலா  உள்ளிட்ட உலகத்தில் உள்ள எந்த தலைவர்களை சந்தித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar ,Sarkar , Sarkar ,movie, Minister Jayakumar, opposed
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...